தம்மிடம் ஆப்கானிஸ்தானில் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்களை பிரிட்டன் ஏற்றுக்கொள்ள டென்மார்க் பெரும் தொகையைக் கொடுத்தது.
வெளியிடப்படாத பெரும் தொகை ஒன்றை ஐக்கிய ராச்சியத்துக்குக் கொடுத்துத் தம்மிடம் ஆப்கானிஸ்தானில் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தவர்களை அங்கே அகதிகளாக அனுப்பிவைத்திருக்கிறது டென்மார்க். அந்த மொழிபெயர்ப்பாளர்கள் பிரிட்டிஷ் இராணுவத்துக்காக ஊழியம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டாலும் டனிஷ் சீருடை அணிந்து டென்மார்க்குக்கு வேலை செய்து அவர்களிடம் ஊதியம் பெற்று வந்தார்கள்.
அவர்களில் 12 டென்மார்க்குக்கு விசா விண்ணப்பம் செய்து அவை மறுக்கப்பட்டன. எல்லோருக்கும் ஐக்கிய ராச்சியம் குடியுரிமை கொடுத்திருக்கிறது.
அந்த 23 பேரையும் ஆப்கானிஸ்தானிலிருந்து கொண்டுவந்து ஐக்கிய ராச்சியத்தில் சமூகத்தில் இணைய வைக்கவும், அவர்களுக்கான ஐந்து வருடச் செலவுகளும் என்று கணிக்கப்பட்ட ஒரு பெரிய தொகையை டென்மார்க் இதற்காகக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
2019 இல் டென்மார்க்கில் அரசுக்கு வந்த கட்சிகள் நாட்டில் அகதிகளை ஏற்றுக்கொள்வதைப் பெருமளவில் குறைத்து வருகின்றன. அத்துடன் அகதிகள், வெளிநாட்டவர்களுக்கான சலுகைகளையும் பெருமளவில் குறைத்து அவர்கள் செய்யும் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் அகதிகளாக டென்மார்க்குக்குள் நுழைபவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கருகிலுள்ள நாடுகள் எங்காவது குடியேற்றும் முயற்சியில் பல ஆசிய, ஆபிரிக்க நாடுகளுடன் டென்மார்க் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்