ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க வருடத்துக்கு 97 பில்லியன் எவ்ரோ செலவிடும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தொலைத்தொடர்பு, இணையத்தளக் கட்டுப்பாடுகள் பற்றிய முடிவுகளை எடுப்பவர்கள் மீது அழுத்தம் கொடுக்கும் நிறுவனங்களும், அவைகளின் கிளைகளும் சேர்ந்து வருடத்துக்குச் செலவிடும் தொகை 97 பில்லியன் எவ்ரோ என்கிறது அதுபற்றி ஆராய்ந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையொன்று.
மருத்துவ நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பெற்றோலிய நிறுவனங்கள், இரசாயணத் தயாரிப்பாளர்கள் தமது துறைகளுக்காகச் செலவழிப்பதை விட அதிகமான தொகையை 612 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலவிடுகின்றன. குறிப்பிட்ட துறையில் முடிவெடுப்பவர்களின் மனதை மாற்றுவதற்காகத் தாம் ஒதுக்கியிருக்கும் செலவு விபரங்களை அந்தந்த நிறுவனங்களிடம் பெற்றே இக்கணிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
கூகுள் 5,75 பில்லியன், பேஸ்புக் 5, 5 பில்லியன்,மைக்ரோசொப்ட் 5,25 பில்லியன், அப்பிள் 3.5 பில்லியன், ஹுவாவேய் 3 பில்லியன், அமெஸான் 2,75 பில்லியன் எவ்ரோவைச் செலவிடுகின்றன. குறிப்பிட்ட விடயத்துக்காகச் செலவிடுவதில் இவையே அத்துறை நிறுவனங்களில் முதலிடங்களில் இருக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகார மையத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அமைப்பு மேற்கண்ட விபரங்களை வெளியிட்டு அத்தொகைகளின் அளவு பற்றி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரம் சிந்திக்கவேண்டும் என்று எச்சரித்திருக்கிறது. அத்துடன் முக்கிய முடிவுகளை எடுக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் கடந்த வருட 270 சந்திப்புக்களில் முக்கால் பாகம் குறிப்பிட்ட மனம் மாற்றுவதற்கான காரணங்களை விபரிக்கும் பிரதிநிதிகளைச் சந்திப்பதிலேயே செலவிடப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்