கொரோனாத்தொற்றுக்கால இழப்புக்களுக்காக பிரான்சின் முன்னாள் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.
இம்மனுவேல் மக்ரோனின் முன்னாள் மக்கள் ஆரோக்கிய அமைச்சரான Agnes Buzyn நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.காரணம் 2017 – 2020 வரை அமைச்சராக இருந்த அவர் கொரோனாத்தொற்றுக்கள் ஆரம்பித்த காலத்தில் சரியான முறையில் இயங்கி மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதாகும்.
கொவிட் 19 ஐ எதிர்கொள்வதற்கான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு அவரிடமிருந்தது. அவ்வியாதியால் முதலாவது இறப்பு ஏற்பட ஆரம்பித்தபோதே அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழவே அதையடுத்த சில வாரங்களில் அவர் பதவி விலகினார்.
வுஹான் நகரில் கொவிட் 19 தாக்குதல்கள் ஆரம்பித்தபோது அவர் பிரான்ஸ் அப்படியொரு நிலைமையைச் சமாளிக்கத் தயாராக இருப்பதாக உறுதியாகக் கூறியிருந்தார். நாட்டின் மருத்துவ சேவையாளர்கள் கொவிட் 19 ஆரம்பகாலத்தில் ஒழுங்கான பாதுகாப்பு உபகரணங்களின்றித் திணறினார்கள். அமைச்சரோ நாட்டில் மில்லியன் கணக்கில் பாதுகாப்புக் கவசங்கள் இருபப்தாக ஜனவரியில் கூறியிருந்தார்.
முன்னாள் பிரதமர் Edouard Philippes மற்றும் நாட்டின் தற்போதைய மக்கள் ஆரோக்கிய அமைச்சர் ஒலிவர் வரான் ஆகியோரின் நடவடிக்கைகள் மீதும் அதே நீதிமன்றம் விசாரணைகள் செய்து வருகிறது.
பதவி விலகிய Agnes Buzyn மரோன் கட்சியின் சார்பில் பாரிஸ் நகர ஆளுனர் பதவிக்காகப் போட்டியிட்டு மூன்றாவது இடத்தையே பெற்றார். அவர் மீது நீதிமன்றம் குற்றவாளி என்று முடிவு எடுக்குமானால் அது அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தேர்தலில் இம்மானுவேல் மக்ரோனுக்கு ஒரு பலவீனமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்