காபுல் விமான நிலையத்துக்குப் பயணிகளை ஏற்றிச்செல்லும் சேவையை ஆரம்பிக்கும் முதல் நிறுவனம் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்.
ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தினரின் கைகளில் விழுந்தபின் காபுல் விமான நிலையம் அமெரிக்காவின் கையிலிருந்தது. அங்கிருந்து சுமார் 120,000 பேர் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணித்தனர். அதையடுத்து அமெரிக்க இராணுவமும் அங்கிருந்து விலகியபின் அதை யார் இயக்குவது என்று கேள்வி எழுந்திருந்தது. ஒரு வழியாக சமீப நாட்களில் விமான நிலையம் இயங்க ஆரம்பித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு நாடுகளுடன் தலிபான் இயக்கத் தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்த ஒழுங்கு செய்திருந்த கத்தார் காபுல் விமான நிலையத்தை மீண்டும் இயங்கச் செய்வதற்கும், ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஒழுங்குசெய்வதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறது. அத்துடன் துருக்கியும் விமான நிலையத்துக்கான பாதுகாப்பு, இயக்க உதவி ஆகியவற்றைச் செய்து வருகிறது.
அதையடுத்து, கத்தாரிலிருந்து காபுலுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் உணவுவகை, மருந்துகள் போன்ற மனிதாபிமான உதவிகளுடன் பறந்தன. இரண்டாவது நாடாக எமிரேட்ஸும் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளுடன் தனது விமானத்தில் பறக்க ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கிறது. செப்டெம்பர் 03 ம் திகதி முதல் தினசரி 11 விமானங்கள் எமிரேட்ஸிலிருந்து காபுலுக்குப் பறந்து வருகின்றன.
அத்துடன் கத்தார் ஏர்லைன்ஸ் இரண்டு தடவை விமானங்களில் மேலும் சில வெளிநாட்டவர்களைக் காபுலிலிருந்து வெளியேற்றியிருக்கிறது. செப்டெம்பர் 13 ம் திகதி முதல் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முதலாவது நாடாகப் பயணிகளைக் காபுலுக்கு ஏற்றிச் செல்லும் என்று பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது.
ஆகஸ்ட் 15 ம் திகதியன்று காபுல் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வரமுன்பு காபுல் விமான நிலையத்தில் 80 பெண்கள் வேலைசெய்து வந்தார்கள். தமது ஆட்சியில் ஷரியாச் சட்டங்களுக்கு இணங்க பெண்கள் சுதந்திரமாக வேலைகளுக்கு போவது அனுமதிக்கப்படமாட்டாது என்று தலிபான் இயக்கத் தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆனாலும், அதுபற்றிய மேலதிக விபரங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை.
தலிபான்களின் கொடூர ஆட்சி 1990 களில் நடந்தபோது இருந்த நிலைமையை அறிந்து வேலைகளுக்குச் சென்றுவந்த பெரும்பாலான பெண்கள் தமது வேலைத்தளத்துக்குப் போவதை நிறுத்திக்கொண்டார்கள். அதேபோலவே விமான நிலையத்துக்கு வேலைக்குச் செல்பவர்களில் பெரும்பாலானோர் தமது உயிருக்கஞ்சி வேலைக்குப் போகவில்லை.
ஆயினும் வருமானத்துக்கு வேறு வழியின்றித் துணிந்து சில பெண்கள் காபுல் விமான நிலையப் பணிக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். இதுவரை 15 பெண்கள் காபுல் விமான நிலையப் பணிக்குச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தமது பணிகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்