செப்ரெம்பர் 11 நினைவு நாளன்று விமானங்கள் தாழப்பறந்து பயிற்சி. பாரிஸ் புற நகரவாசிகளிடையே பீதி.
பிரதமர் ஜீன் காஸ்ரோ மற்றும் ஆயுதப்படைத் துறை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி(Florence Parly) ஆகியோர் பயணம் செய்த எயார் பஸ் விமானம் ஒன்றுக்கு வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் பயிற்சியில் (air-to-air refuelling operations) விமானப்படை போர் விமானங்கள் ஈடுபட்டன.நேற்று சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
ஏயார் பஸ்-330 (Airbus A330) போக்குவரத்து விமானமும் ராபல்(Rafale) போர்விமானமும் மிகத் தாழப்பறந்து சென்றதால் பாரிஸ் நகரின் தெற்குப் புற நகரங்களில் மக்கள் பதற்றமடைய நேரிட்டது. ஏயார் பஸ் இராணுவப் போக்குவரத்து விமானத்தை வழிமறித்த போர் விமானம் வானில் வைத்தே அதற்கு எரிபொருள் நிரப்பியது. இரண்டு விமானங்களும் பேரொலி எழுப்பியவாறு மிகவும் தாழப்பறந்து சென்று பாரிஸ் நகருக்குத் தெற்கே உள்ள Vélizy-Villacoublay வான் படைத் தளத்தில் தரையிறங்கின.
அது ஒரு பயிற்சி நடவடிக்கை என்பதை அறியாத பலரும் விமானங்கள் எழுப்பியபேரொலி கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் இருபதாவது ஆண்டு நிறைவை நினைவுகூருகின்ற தினத்தில் இவ்வாறுவிமானங்கள் கிலியை ஏற்படுத்தியதால்பலரும் என்னவோ ஏதோ என்று பதற்றமடைந்தனர். ஒலி எல்லை மீறிப் பறந்த போர் விமானம் ஏற்படுத்திய பேரொலி (sonic boom) கேட்ட பலரும் விமானத்தில் குண்டு வெடிப்பு நேர்ந்துவிட்டதாக எண்ணிப் பீதியடைந்தனர்.
“குண்டு வெடிப்பொலி போலக் கேட்டது. விமானம் தாழப்பறந்து எங்கோ மோதிவிட்டது என எண்ணினேன்” -என்று புறநகர வாசி ஒருவர் தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்தார். விமானங்கள் தாழப்பறக்கின்ற காட்சிகளைப் பலரும் வீடியோ பதிவுகளாக வெளியிட்டனர்.
குமாரதாஸன். பாரிஸ்.