25 வயதுவரையானவர்களுக்குக் கருத்தடை உதவி இலவசம் என்று பிரான்ஸ் அறிவித்தது.

“18 – 25 வயதுப் பெண்கள் அதற்கு முன்னர் இளமைக்காலத்தில் அனுபவித்த உரிமைகளை இழப்பதற்குரிய சாத்தியங்கள் அதிகம். காரணம் அவர்களுடைய பொருளாதாரம் பலவீனமாகலாம்,” என்று இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதற்கான காரணத்தை அரசின் பிரதிநிதி லூயிஸ் டெல்வியர் தெரிவித்தார்.

இளவயது மாதரிடம் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பலவீனத்தைச் சமப்படுத்த ஜனாதிபதி மக்ரோன் அரசால் எடுக்கப்பட்டுவரும் ஒரு நடவடிக்கை இதுவாகும். பிரான்ஸின் பெண்கள் நல இயக்கங்களும், சமூக சேவையினரும் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கிறார்கள்.

கருத்தடை செய்து கொள்ளுவதற்கான உரிமை சமீப வருடங்களில் பல நாடுகளில் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. முக்கிய காரணம் மதவாதிகளின் கை அரசியலிலும், சமூகத்திலும் ஓங்கி வருவதாகும். போலந்து, சமீபத்தில் நாட்டில் கருத்தடை செய்யும் உரிமையைப் பெரிதும் கட்டுப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் அரசியலிலும் டொனால்ட் டிரம்பின் காலத்தில் இதே நிலைமை உண்டாகியது. ஒபாமாவின் காலத்தில் கொண்டுவரப்பட்ட “சகலருக்கும் இலவச குழந்தைக்கட்டுப்பாட்டு உதவி” டிரம்ப்பின் காலத்தில் அவருடைய பின்னணியாக இருந்த பழமைவாதக் கிறீஸ்தவ அமைப்புக்களின் கோரிக்கையால் நிறுத்தப்பட்டன.

சாள்ஸ் ஜெ. போமன்