பத்திரங்களின்றி நாட்டினுள் வாழ்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவரவர் நாடுகளுக்கு அனுப்ப சுவீடன் அரசு முடிவு.

இதுவரை காலமும் இருந்த அரசியல் நடப்பிலிருந்து மாறி, சுவீடனில் வாழும் வெளிநாட்டவர்களில் அனுமதிப் பத்திரமில்லாதவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க நாட்டின் பொலீசார் பணிக்கப்படுவார்கள் என்று சுவீடன் அரசு அறிவித்திருக்கிறது. அதற்காக பணியிடங்களிலும் பொலீசார் அதிரடி வேட்டைகள் நடாத்த அனுமதிக்கப்படுவார்கள். இது வரவிருக்கும் புதிய வருடத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

குடியுரிமை அனுமதியில்லாதவர்கள் வேலைகளில் அமர்த்தப்படுதல், நாட்டில் கடுமையான குற்றங்கள் அதிகரிப்பு போன்றவை சமீப வருடங்களில் சுவீடனில் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இந்த நிலைமையை நாட்டின் சோஷியல் டெமொகிரடிக் கட்சியும் அதன் ஆதரவுக் கட்சிகளும் பல வருடங்களாகவே அசட்டை செய்து வந்திருக்கின்றன என்ற கருத்து நாட்டில் பரவலாக நம்பப்படுகிறது. 

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் சுவீடனில் குடியேறியவர்கள் செய்யும் குற்றங்களைக் குறைப்பதற்காக ஆளும் கட்சி என்ன திட்டங்களைக் கொண்டுவரவிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் உரத்த குரலில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கான நடவடிக்கைகளை யார் எடுக்கப்போகிறார்கள் என்பது தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் காரணமாகலாம் என்று கருத்துக்கணிப்புக்கள் குறிப்பிடுகின்றன.

சுவீடன் அரசு வறிய, வளரும் நாடுகளுக்குக் கொடுத்துவரும் மனிதாபிமான உதவிகள் பற்றிய முடிவுகள் இவ்விடயத்தில் பயன்படுத்தப்படும் என்கிறார் உள்துறை அமைச்சர். தமது குடிமக்களில் சுவீடனில் அனுமதியின்றி வாழ்பவர்களைக் கைது செய்து திருப்பியனுப்பும்போது அவர்களைக் குறிப்பிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளாவிடில் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் குறைக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார். அதன் மூலம் தற்போது தமது குடிமக்களைத் திருப்பியெடுக்காமல் தவிர்க்கும் நாடுகள் தண்டிக்கப்படுவார்கள்.

அனுமதியின்றி வாழ்பவர்களைத் தேடிப்பிடித்தல் நடவடிக்கையை நாட்டின் பொலீசாரும், அதன் பக்கவிளைவு வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளைப் பாதிக்கலாம் என்பதைப் பெரும்பாலான மனித உரிமை அமைப்புக்களும் எதிர்த்திருக்கின்றன. வெளிநாட்டு அபிவிருத்தி உதவிகளுக்காக இப்படியான தண்டனைகள் கொடுக்கப்படலாகாது என்பது சர்வதேசக் கோட்பாடு என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்