3,000 சுகாதார சேவையாளர்கள் ஊதியம் இன்றி இடைநிறுத்தம்! ஊசி ஏற்றாத பலர் பதவி விலகினர்
பிரான்ஸில் சுகாதாரத்துடன் தொடர்புடைய பணிகளைப் புரிவோர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கான அவகாசம் நேற்றுப் புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து இதுவரை ஓர் ஊசியையேனும் ஏற்றிக் கொள்ளாதபணியாளர்கள் சுமார் மூவாயிரம் பேர்அவர்களது வேலைகளில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளனர்.அவர் களைவிட தடுப்பூசி ஏற்ற மறுத்த டசின் கணக்கான பணியாளர்கள் தங்கள் வேலையில் இருந்து விலகியுமுள்ளனர்.
சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இத்தகவலை இன்று வெளியிட்டிருக்கிறார்.நாளாந்தம் தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகமாக இருப்பதால் தொற்று நோய் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
சுகாதார நிலையங்கள், கிளினிக்குகள்போன்றவற்றைச் சேர்ந்த தொழிலார்கள்மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையானதாதியர்கள் ஆகியோரே ஊதியமற்ற தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களாவர். பாரிஸ் நகர மருத்துவமனைகளைச் சேர்ந்த 340 பேரும் அவர்களில்அடங்குகின்றனர்.
மூதாளர் இல்லப் பராமரிப்பாளர்கள்உட்பட சகல சுகாதாரப்பணியாளர்களும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவாக செப்ரெம்பர் 15 ஆம் திகதியை கடந்த ஜூன் மாதம் அதிபர் மக்ரோன் அறிவித்திருந்தார். பிரான்ஸில் 12 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 70 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.உலக நாடுகளில் இது மிக அதிக வீதம் ஆகும். ஆனால் நாட்டின் சுகாதாரப் பணியாளர்களில் பலர் இன்னமும் தடுப்பூசி ஏற்றுவதற்குப் பின்னடித்து வருகின்றனர்.தடுப்பூசியின் செயற்றிறன் மீது நம்பிக்கை இன்மை மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் அவர்கள் தடுப்பூசியை ஏற்றாமல் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
நாட்டின் சுகாதாரப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 2.7 மில்லியன்ஆகும். அவர்களில் 12 வீதமான பணியாளர்களும்,6 சதவீதமான மருத்துவர்களும் இன்னமும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என்று பொதுச் சுகாதாரத் துறைமதிப்பிட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.