முக்கிய நீர்மூழ்கி ஒப்பந்த நிகழ்வில் ஆஸி பிரதமரின் பெயரை உச்சரிக்க மறந்தார் அமெரிக்க அதிபர் பைடன்!

அமெரிக்காவின் அணு நீர்மூழ்கித் தொழில் நுட்பத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்துகொள்ளுகின்ற முக்கிய முத்தரப்புப் பாதுகாப்புத் திட்டத்தைஅதிபர் ஜோ பைடன் நேற்று வெள்ளைமாளிகையில் அறிவித்தார். இங்கிலாந்து பிரதமர் பொறிஸ் ஜோன்சன், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொறிசன்(Scott Morrison) ஆகியோரும் அந்த நிகழ்வில் வீடியோ வழியாக அகலத் திரையில் தோன்றினர். அச்சமயம் பொறிஸ் ஜோன்சனின் பெயரைச் சொல்லி அவருக்கு நன்றி தெரிவித்த பைடன்,அடுத்தபடியாகஆஸி பிரதமருக்கு நன்றி கூறுகையில் சில நொடிகள் தாமதித்து விட்டு அவரது பெயருக்குப் பதிலாக “that fellow Down Under” என்று கூறி நன்றியை வெளியிட்டார். ஸ்கொட் மொறிசனின் பெயரைமறந்து அதற்குப் பதிலாக “Down Under”என்று அவரைக் குறிப்பிட்ட சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்க அதிபரது “தடுமாற்றம்” ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் உட்பட உலக ஊடகங்களில் வெளியாகிபல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.”Down Under என்பது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பேச்சு வழக்குச் சொல் ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான தொரு பாதுகாப்பு உடன்படிக்கையின் ஆரம்ப நிகழ்வில் ஆஸ்திரேலியாவின் பேச்சு மொழியில் அந்நாட்டுப் பிரதமரை பெயரிட்டுப் பேசிய பைடனின் செயலால் ஆஸ்திரேலியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியா முதல் முறையாக அணு நீர்மூழ்கிகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.அமெரிக்கா-இங்கிலாந்து – ஆஸ்திரேலியா ஆகிய முத்தரப்புகளது கூட்டுத்திட்டத்தின் கீழ் அணு நீர்மூழ்கிப் பரிமாற்றங்கள் நடைபெறவுள்ளன.

பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்துவருகின்ற சீனாவின் செல்வாக்கை கவனத்தில் கொண்டு ஆஸ்திரேலியாவின் கடல்ஆதிக்கத்தை அணு நீர்மூழ்கிகள் மூலம் பலப்படுத்துவதற்கு அமெரிக்கா விரும்புகிறது. அதனை நிறைவேற்றும் ஒரு திட்டமாகவே இங்கிலாந்துடன் இணைந்து அணு நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தைஆஸ்திரேலியாவுக்கு வழங்க அது முன் வந்துள்ளது. இந்தோ பசுபிக்கில் சீனாவுக்கு முகம் கொடுக்கவுள்ள இந்தப் புதிய கூட்டணிக்கு ‘AUKUS alliance’ (Australia-UK-US alliance) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தப் புதிய முன்னெடுப்பு பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையையும் ஆயுதப் போட்டியையும் ஏற்படுத்தும் என்று சீனா கண்டித்திருக்கிறது.

“இது ஒரு தீவிரமான – பொறுப்பற்ற- குறுகிய எண்ணம் கொண்ட-செயல். காலாவதியாகிவிட்ட பனிப்போர்க்காலமனநிலை…” – என்று சீன வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா தனது அணு நீர்மூழ்கித் தொழில் நுட்பத்தை வேற்று நாடு ஒன்றுடன் பகிர்ந்து கொள்வது கடந்த 50 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.இதற்கு முன் அது இங்கிலாந்துடன் மட்டுமே அதனைப் பகிர்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் கட்டப்படவுள்ள 12 அணு நீர்மூழ்கிகளுக்கானதொழில்நுட்பங்களையும் ஏனைய உதவிகளையும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் முத்தரப்புப் பங்காளிகளாக இணைந்து வழங்க இருப்பதை மூன்று நாடுகளது தலைவர்களும் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். அதற்காக வெள்ளை மாளிகையில் கூட்டப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே ஜோ பைடன், ஆஸ்திரேலியப் பிரதமரது பெயரை உச்சரிக்க மறந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

“அதிபர் பைடன் முக்கியமான ஒரு தருணத்தில் ஸ்கொட் மொறிசனின்பெயரை மறந்தமை, ஆஸ்திரேலியப் பிரதமர் நம்புகின்ற இந்தப் பாதுகாப்புத் திட்டத்திற்கு நல்லதோர் ஆரம்பமாகத் தெரியவில்லை”என்று”சிட்னி மோர்னிங்ஹெரால்ட்” (Sydney Morning Herald”)பத்திரிகை அதன் செய்தி ஆய்வு ஒன்றில்தெரிவித்திருக்கிறது. வல்லரசுகள் மத்தியில் ஆஸ்திரேலியாவின் ஸ்தானம் எந்தநிலையில் இருக்கிறது என்பதையும்இந்த நிகழ்வு பிரதிபலிப்பதாக அதில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை பைடனின் தடுமாற்றம் பாதுகாப்புஉடன்படிக்கையின் முக்கியத்துவத்தில் எந்தத் தாக்கத்தையும் காட்டாது என்று சிட்னி “டெய்லி ரெலிகிராப்” (Daily Telegraph) பத்திரிகையின் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை அணு ஆயுதங்கள் எதனையும் கொண்டிராத நாடு ஆஸ்திரேலியா ஆகும் தற்போது அது உலகில் அணு நீர்மூழ்கிகளைப் பயன்படுத்துகின்ற நாடுகளது வரிசையில் ஏழாவதாக இணைகின்றது.

🔵பிரான்ஸின் காலை வாரிய ஆஸி!

ஆஸ்திரேலியா பன்னிரெண்டு அணு நீர்மூழ்கிகளைத் தயாரிக்கின்ற உடன்படிக்கையை முதலில் பிரான்ஸுடனேயேசெய்வதற்குத் தீர்மானித்திருந்தது. பாரிஸுடன் மேற்கொண்ட பூர்வாங்கப் பேச்சுக்களின் முடிவில் இரு தரப்புகளும் அதற்கு இணங்கியிருந்தன. சுமார் 56 பில்லியன் ஈரோக்கள் பெறுமதியான இந்த அணு ஒப்பந்தம் பிரான்ஸின் தீவிர கரிசனைக்குரிய ஒன்றாக இருந்து வந்தது.பல கட்டப் பேச்சுக்களின் முடிவில் ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்ருந்த நிலையில் ஆஸ்திரேலியா கடைசி நிமிடத்தில் பிரான்ஸின் காலை வாரியது போன்று அதனை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. எதிர்பாராதவிதமானஇந்தத் திருப்பம் பாரிஸ் – கன்பெரா உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தி யிருக்கிறது

.பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *