உலகிலேயே பெருமளவில் கொவிட் 19 ஆல் இறப்பு ஏற்பட்ட பெருவில் மூன்றாவது அலையாகப் பரவுகிறது பெருவியாதி.
32.5 மில்லியன் பேரைக் கொண்ட பெருவில் சுமார் 200,000 பேரின் உயிரை ஏற்கனவே கொவிட் 19 எடுத்திருக்கிறது. ஒப்பீட்டளவில் உலகிலேயே அதிக விகிதத்தில் அவ்வியாதியால் இறந்தவர்கள் பெருவில்தான் அதிகம். ஏழை நாடான பெருவில் மீண்டும் அந்த வியாதி மூன்றாவது அலையாகப் பரவி வருகிறது. அது இம்முறை சுமார் 60,000 பேரையாவது உயிரிழக்க வைக்கும் என்று கணிக்கிறது நாட்டின் அரசு.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில் பெருவில் கொவிட் 19 பரவ ஆரம்பித்திருந்தது. தடுப்பு மருந்துகளுக்கோ, கொவிட் 19 மருத்துவ சேவைக்கோ அதிக பணமில்லாத நாடான பெரு பெரும்பாலும் நன்கொடைகளிலேயே நம்பியிருக்கிறது. இதுவரை சுமார் 27 % மக்களே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்கிறார்கள்.
கொவிட் 19 ஆல் தொற்றியவர்களுக்கான பிராணவாயு மட்டுமன்றி மருத்துவசாலை இடங்களுக்கும் மிகப்பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு நோயாளிக்கு இடம் கிடைக்கும்போது இடமில்லாமல் 79 பேர் இறந்துவிடுகிறார்கள் என்கிறார் யேசுஸ் வல்வெர்டே என்ற தலைநகரின் அவசரகால மருத்துவமனையின் நிர்வாகி.
தென்னமெரிக்க நாடுகளில் கடுமையாகத் தாக்கிவரும் லம்டா என்ற திரிபே பெருவிலும் பரவிவருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்