விண்வெளியில் முதல் முதலாவதாகப் பறந்த சாதாரண சுற்றுப்பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்பினார்கள்.
மின்கல வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் ஏலொன் மஸ்க் தனது SpaceX விண்வெளி நிறுவனத்தின் மூலமாக முதல் தடவையாகச் சாதாரண மனிதர்கள் நால்வரை விண்வெளிக்கு அனுப்புவதில் வெற்றிகண்டிருக்கிறார். விண்வெளி விமானிகளாக முழுப்பயிற்சி பெறாத அமெரிக்கர்கள் நால்வர் மூன்று நாட்கள் விண்வெளியில் பூமியை 366 மைல் தூரத்திச் சுற்றிவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.
ஜாரெட் இஸாக்மான் என்பவர் சுமார் 200 மில்லியன் டொலர் செலவிட்டு முதலாவது விண்வெளிச் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து வைத்தார் என்று குறிப்பிடப்படுகிறது. அவருடன் Christopher Sembroski, Sian Proctor, Hayley Arceneaux ஆகிய மூவரும் அந்தப் பிரயாணத்தில் பங்குபற்றியிருந்தனர். இவர்களில் 29 வயதான ஹெய்லியே முதல் முதலாக விண்வெளிப் பயணத்தில் பங்கெடுத்தவர்களில் இளையவர் ஆகும்.
விண்வெளிக் கலத்தை சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டவர்கள் இயக்கவில்லை. விமானிகளே பூமியிலிருந்து இயக்கினார்கள். விண்கலம் மீண்டும் திரும்பியதை நேரடி ஒளிபரப்பில் காண ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இந்தச் சுற்றுப்பயணம் விரும்பியவர்கள் தமது செலவில் எதிர்காலத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்வதற்கு வழிவகுக்கும் முதலாவது படி என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்