கில்போவாச் சிறையிலிருந்து தப்புவதற்காகக் கைதிகள் பாவித்த கரண்டி பாலஸ்தீனர்களின் விடுதலை அடையாளமாகியிருக்கிறது.
பாலஸ்தீன விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த ஆறு பேர் இஸ்ராயேலின் கடுங்காவல் சிறைகளிலொன்றான கில்போவா சிறையிலிருந்து தப்பியோடியது பாலஸ்தீனர்களிடையே பெரும் உற்சாகத்தை உண்டாகியிருக்கிறது. மார்கழி மாதத்திலிருந்தே உணவுண்ணப் பாவிக்கும் கரண்டிகள், கேத்தல் கைபிடி ஆகியவற்றை உபயோகித்து அவர்கள் தமது தப்பியோடும் சுரங்கத்தைத் தோண்டியிருக்கிறார்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.
பிரபல ஹொலிவூட் சினிமாக்களில் நடப்பதுபோலப் பொறுமையுடன் திட்டமிட்டு அவர்கள் சுரங்கமொன்றைத் தோண்டியிருக்கிறார்கள். தமது காவலின் திறமையில் நம்பிக்கைகொண்ட இஸ்ராயேல் காவலர்கள் அதைக் கவனிக்கவில்லை. தப்பியோடும் சமயத்தில் சிறையின் எல்லைக் காவலர்கள் தூக்கத்திலிருந்ததும் தப்பியோடுகிறவர்களுக்குச் சாதகமாகிவிட்டது.
பாலஸ்தீனர்களுக்கிடையே கொண்டாடப்படும் அச்சம்பவம் இஸ்ராயேல் பொலீசாரின் முகத்தில் கரியைப் பூசுவதாக ஆகியிருக்கிறது. அச்சம்பவத்தையடுத்துப் பல சிறைகளிலும், காஸா பிராந்தியத்திலும் பாலஸ்தீனர்களிடையே எழுச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. இஸ்ராயேல் அரசோ தமது சிறைகளின் பாதுகாப்பு, நடப்பு வழக்கம் போன்றவைகளை மீள் பரிசீலனை செய்து வருகிறார்கள்.
குவெய்த் கலைஞரான மைத்தம் அப்தால் சிறையிலிருந்து தப்பியதை ஒரு சிற்பமாக்கியது அரபு நாடுகளிடையே பிரபலமாகியிருக்கிறது. பெரிய கையொன்றில் சிறு கரண்டி இருப்பதை அவர் சிற்பமாக வடித்திருக்கிறார். வெவ்வேறு அரபு நாடுகளிலும் கரண்டியையும் சுதந்திரத்தையும் இணைத்த சித்திரங்கள், சிற்பங்களைக் கலைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
காஸாவில் சுவரொன்றில் ஆறு பாலஸ்தீனக் கைதிகள் தப்புவதும், கரண்டியுடனான கையொன்றும் வரையப்பட்டிருக்கிறது. அங்கே சமீபத்தில் நடந்துவரும் இஸ்ராயேலுக்கு எதிரான நடப்புக்களில் பாலஸ்தீனர்கள் தமது கொடியுடன், கரண்டியொன்றையும் உயர்த்திப் பிடித்துக் கோஷமிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்