ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்ட உரையில் பல தவறான விடயங்களை வெளியிட்ட பொல்சனாரோவின் அமைச்சருக்குக் கொரோனா தொற்று.
பிரேசில் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் மார்ஸெலோ குவேய்ரொகா ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்டங்களில் பங்கெடுத்த பின்னர் பரிசோதிக்கப்பட்டபோது அவர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. அந்தக் கூட்டத்தொடருக்காக வந்திருக்கும் பிரேசில் நாட்டுக் குழுவினரில் கொரோனாத் தொற்றுக் காணப்பட்ட இரண்டாவது நபர் குவேய்ரொகாவாகும்.
குவேய்ரொகா ஏற்கனவே கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பெற்றிருக்கிறார் என்று குறிப்பிடப்படுகிறது. அதையடுத்து அவரது நாட்டுக் குழுவினரைப் பரிசீலித்தபோது வேறெவருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அமைச்சர், கூட்டத்தொடர் முடிந்து அவருடன் வந்தவர்கள் நாடு திரும்பியபின்னரும் நியூயோர்க்கிலேயே சில நாட்களுக்கு இருக்கவேண்டும்.
பிரேசில் குழுவில் தடுப்பு மருந்து போட மறுத்து வருபவர் ஜனாதிபதி பொல்சனரோவாகும். தொற்றுக்கு ஏற்கனவே உள்ளாகிய அவர்,”பிரேசிலில் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளும் கடைசி ஆள் நானாக இருக்கும்,” என்று குறிப்பிட்டார். அவரும், குவேய்ரொகாவும் பல உலகத் தலைவர்களுடன் வெவ்வேறு சமயங்களில் சந்தித்ததாகத் தெரியவருகிறது.
ஜனாதிபதி பொல்சனாரோ பொதுச்சபையில் உரையாற்றியபோது குறிப்பிட்ட பல விடயங்கள் தவறானவை என்று ஊடகங்கள் அவ்விபரங்களை ஆராய்ந்து சுட்டிக்காட்டுகின்றன. அவற்றிச் சில கொரோனாப் பெருவியாதி பற்றியவையாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்