ஐக்கிய ராச்சியத் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் சர்வதேச ரீதியில் எதிர்ப்புக்களைச் சந்திக்கின்றன.
“இரண்டு தடுப்பு மருந்துகளை எமிரேட்ஸ், இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, ஜோர்டான், துருக்கி மற்றும் ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் பெற்றவர்கள் தடுப்பு மருந்துகளைப் பெற்றிராதவர்கள் போலவே 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும்,” என்று ஐக்கிய ராச்சியம் சமீபத்தில் கட்டுப்பாடுகளை வெளியிட்டிருக்கிறது. அதனால் இந்திய வெளிவிவகார அமைச்சர், உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு ஆகியவை அதிருப்தி தெரிவித்திருக்கின்றன.
“ஐரோப்பிய, அமெரிக்க, ஐக்கிய ராச்சியத் தடுப்பூசித் திட்டங்கள் அல்லது ஐக்கிய ராச்சியத்தின் மூலம் வெளிநாடுகளில் நடாத்தப்பட்ட தடுப்பு மருந்துத் திட்டங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்,” என்பது ஐக்கிய ராச்சியத்தின் நிலைப்பாடாகும்.
இந்தியாவில் கொவிஷீல்ட், கோவக்சீன் ஆகிய இரண்டுமே பெருமளவில் அரசின் தடுப்பு மருந்துத் திட்டங்களில் பாவிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் செரும் இன்ஸ்டிடியூட்டால் தயாரிக்கப்பட்ட கொவிஷீல்ட் ஐரோப்பாவிலும் பாவிக்கப்பட்ட அஸ்ரா செனகா நிறுவனத்தின் “வக்ஸெவ்ரியா” தடுப்பு மருந்தாகும்.
உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து பெற்றவர்களைத் தனிமைப்படுத்தலில் இருக்க ஐக்கிய ராச்சியம் கட்டாயப்படுத்தலாகாது என்கிறது அந்த அமைப்பு. தம்மால் ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பு மருந்துகளை உலக நாடுகள் சகலமும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அந்த அமைப்பின் உயர்மட்ட விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் சுட்டிக் காட்டுகிறார்.
அதேசமயம் ஐக்கிய ராச்சியத்தின் புதிய கட்டுப்பாடுகளால் இந்திய அரசும் பெரும் அதிருப்தி அடைந்திருக்கிறது என்று வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த நிலைமையை உடனடியாகத் தீர்க்கவேண்டும் என்று ஐக்கிய ராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் லிஸ் ட்ரஸை கோரியிருக்கிறார். ஒருதலைப்பட்சமான அந்த முடிவை மாற்றாவிடில் இந்தியா எதிர் நடவடிக்கைகள் எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்