பள்ளிச் சிறுவர்களுக்கு மாஸ்க் ஒக். 4 முதல் தளர்த்தப்படுகிறது.
சுகாதாரப் பாஸ் நடைமுறையில் உடனடியாக மாற்றம் ஏதுமில்லை!
இலவச வைரஸ் பரிசோதனைகள் ஒக்ரோபர் 15 முதல் நிறுத்தப்படும்!
கட்டாய சுகாதாரப் பாஸ் விதிமுறையை உள்ளூர் மட்டத்தில்-இடத்துக்கிடம் -தளர்த்துகின்ற திட்டம் ஏதும் உடனடியாகநடைமுறைக்கு வராது என்று அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் அறிவித்திருக்கிறார்.சுகாதார நிலைவரங்கள் முன்னேற்றம் கண்டுவருகின்றபோதிலும் கட்டாய சுகாதாரச் சான்றிதழ் விதிகளைத் தொடர்ந்து பேணுவதற்குஅரசு விரும்புகின்றது.
கட்டணம் மற்றும் மருத்துவரது பரிந்துரை இல்லாமல் இலவசமாக வைரஸ்தொற்றுப் பரிசோதனை செய்து கொள்கின்ற வசதி எதிர்வரும் ஒக்ரோபர் 15 ஆம் திகதி முதல் நிறுத்தப்படும்.
இன்று புதன் கிழமை நடைபெற்ற சுகாதாரப் பாதுகாப்புச் சபையின் கூட்டத்தின் இறுதியில் இந்த விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் வைரஸ் தொற்று நிலைவரம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதால் சுகாதாரக் கட்டுப்பாடுகள் பலவற்றைத் தளர்த்துவது குறித்து அரசு ஆலோசித்துள்ளது.
நாடெங்கும் பள்ளிச் சிறுவர்கள் மாஸ்க்அணிகின்ற கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்யப்படவுள்ளன. எதிர்வரும் ஒக்ரோபர் 4ஆம் திகதி தொடக்கம் தொற்று வீதம் ஒரு லட்சத்துக்கு 50 பேர் என்ற எண்ணிக்கைக்குக் குறைவாக இருக்கின்ற மாவட் டங்களில் ஆரம்பப் பாடசாலைகளில்(CP) சிறுவர்கள் மாஸ்க் அணியவேண்டியது கட்டாயமாக இருக்காது. ஆசிரியர்களும்ஏனையோரும் இந்த தளர்வு விதிகளுள் அடங்கமாட்டார்கள்.தொற்று எண்ணிக்கை 50 பேருக்குக் குறைவாக உள்ள மாவட்டங்களது விவரங்களைக் கல்வி அமைச்சு வெளியிடவுள்ளது. பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல் து பிரான்ஸ் பிராந்தியத்தின் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை ஒருலட்சம் பேருக்கு 50 என்ற எண்ணிக்கைக்கு இன்னமும் குறையவில்லை.
சிறுவர்கள் மாஸ்க் அணிவதைத் தளர்த்துகின்ற இந்த முடிவுக்கு ஆசிரியர் தொழிற்சங்கங்களிடம் இருந்து ஆதரவாகவும்எதிராகவும் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.மருத்துவ நிபுணர்கள் சிலர் இதனைமிக அவசர நடவடிக்கை என்று கருதுகின்றனர்.
குமாரதாஸன். பாரிஸ்.