கத்தலோனியாவுக்குத் தனிநாடு கோரித் தேர்தல் நடாத்தியதற்காக இயக்கத் தலைவர் கார்லோஸ் புய்டமோன் கைதுசெய்யப்பட்டார்.
சுமார் நாலு வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் சுயாட்சி மாநிலமான கத்தலோனியாவைத் தனிநாடாக்கக் கோரித் தேர்தல் நடத்தினார்கள் அப்பிராந்தியத்தின் சில அரசியல் தலைவர்கள். அத்தேர்தலின் பின்னர் அவர்கள் கத்தலோனியா தனிநாடு என்று பிரகடனமும் செய்தார்கள். அவை ஸ்பெயினுக்கு எதிரானவை என்று கூறி அத்தலைவர்கள் சிலரைக் கைதுசெய்ய முயன்றது ஸ்பெயின். அவர்களின் முக்கியமானவர் கார்லோஸ் புய்டமோன் ஆகும்.
ஸ்பெயினிலிருந்து தப்பியோடி பெல்ஜியத்தில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தார் புய்டமோன். ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினரான அவரைக் கைது செய்வதானால் அப்பாராளுமன்றம் அவரது பா.உ-பாதுகாப்பை நீக்கவேண்டும். அதை நாளடைவில் பாராளுமன்றம் நிறைவேற்ற ஸ்பெய்ன் முயன்று வெற்றியும் பெற்றது.
பெல்ஜியத்திலிருந்து புய்டமோன் வியாழனன்று இத்தாலியில் சார்டினியா பிராந்தியத்துக்கு விஜயம் செய்தார். அங்கே புலம்பெயர்ந்து வாழும் கத்தலோனியர்களைச் சந்திக்கவிருந்தார். விமான நிலையத்தில் இறங்கிய அவரை ஸ்பெயின் உயர்நீதிமன்ற வேண்டுகோளின்படி இத்தாலியப் பொலீசார் கைது செய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
மக்களை அரசுக்கெதிராகப் புரட்சி செய்யத் தூண்டியதாக அவரை நீதிமன்றத்தில் நிறுத்தவிருக்கிறது ஸ்பெய்ன். அங்கே அனுப்பப்பட்டால் அவர் 25 வருடங்கள் வரைச் சிறைக்கு அனுப்பப்படலாம் என்ற நிலையில் இத்தாலி என்ன முடிவு எடுக்கும் என்பது தெரியவில்லை. அதுபற்றிய முடிவை இத்தாலிய நீதிமன்றம் எடுக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்