“தாயகக்கனவுடன்” எம் நெஞ்சங்களில் நிறைந்தவர் வர்ணராமேஸ்வரன்
“தாயகக்கனவுடன்” எம் நெஞ்சங்களில் நிறைந்த கலைஞன் இசைக்கலைஞன் வர்ணராமேஸ்வரன் அவர்கள் இவ்வுலகை பிரிந்த செய்தி பலரையும் கவலையடையச்செய்துள்ளது.
புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் அடுத்த தலைமுறையினருக்கு கலையை எடுத்துச்செல்லும் பணியில் பலருக்கு ஆசிரியராக விளங்கி நெறிப்படுத்திய ஒரு கலைஞர் ஆவார்.தாயகத்திற்கு அவரின் ஒவ்வொரு பயணத்தின் போதும் அங்குள்ள பலருக்கும் நேரடியாக பயிற்சிகளை வழங்கி தன் பணியை மேற்கண்ட கலைஞர் ஆவார்.
தாயகத்தின் பல ஆலயங்கள் மீதும் பக்தியுடன் இவர் பாடிய பாடல்களும் இவரின் தனித்திறமையை பறைசாற்றும்.
பல்வேறு மேடைகளிலும் கர்நாடக இசைக்கச்சேரிகளை தொடர்ச்சியாக சளைக்காது ஆற்றிய பெருமைக்குரிய கலைஞர் இவர்.அதே போல் மாணவர்களுக்கும் பயிற்றுவித்து மேடையேற்றி அழகுபார்த்த ஒரு தனித்துவமான கலைஞர் திரு வர்ணராமேஸ்வரன் அவர்கள்.
மண்ணை பிரிந்து புலத்தில் வாழும் மக்களின் உள்ளங்களை புரிந்து அதனை கவி வரிகளாக்கி இசையமைத்து இவர் பாடிய பல பாடல்கள் மறக்கமுடியாதவை.
அத்தனை தனித்துவமான எம் இசைக்கலைஞனை கலையுலகம் இழந்துவிட்டது. கலைஞன் வர்ணராமேஸ்வரன் அவர்களின் மறைவிற்கு வெற்றிநடை ஊடகம் ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து அஞ்சலிகளை பகிர்வுசெய்கிறது.