சிறீலங்காவைச் சேர்ந்த லூயி சாண்ட் சுவீடன் விளையாட்டுச் சரித்திரத்தில் நிகழ்த்திய வித்தியாசமான சாதனை.

சுவீடன் நாட்டுக்காக 100 க்கும் அதிகமான தேசிய கைப்பந்து விளையாட்டுப் மோதல்களில் விலையாடியிருக்கும் லூயி சாண்ட் நாலு மாதத்தில் சிறீலங்காவிலிருந்து சுவீடிஷ் பெற்றோரால் தத்தெடுத்துக் கொண்டுவரப்பட்டவர். இப்போது 28 வயதான இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை பிரான்ஸில் Brest, Fleury ஆகிய பெண் குழுக்களிலும் வெற்றிகரமாக விளையாடி வந்தவராகும். 

திடீரென்று தான் விளையாடிவந்த Fleury குழுவுடன் தனது ஒப்பந்தத்தை  அவர் முறித்துக்கொண்டபோது வெளியிட்ட காரணம் பலரையும் ஆச்சரியப்படவைத்தது.

“சமீப வருடங்களாக மனதுக்குள் பெரும் வேதனையை அனுபவித்து வந்தேன். அது நான் வாழவேண்டுமா என்று என்னைக் கேட்டுக்கொள்ளுமளவுக்கு மோசமாகிவிட்டது. அதற்குக் காரணம் சிறு வயதிலிருந்தே நான் தவறான உடலில் இருப்பதாக ( gender dysphoria) உணர்ந்து வந்ததாகும். நான் என்னை ஆணாகவே உணர்கிறேன். அதனால், அறுவைச் சிகிச்சை மூலம் எனது பாலை மாற்றிக்கொள்ளப்போகிறேன்,” என்று தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அத்துடன் தான் இனிமேல் முழுவதுமாகக் கைப்பந்தாட்டத்தை நிறுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அறுவைச் சிகிச்சை முடிந்து இரண்டு வருடங்களான பின்பு அவர் மீண்டும் ஆணாக அதே பெயருடன் சுவீடனின் உயர்மட்ட ஆண்கள் கைப்பந்தாட்டத்த்ல் பங்குபற்ற ஆரம்பித்து 25 ம் திகதி சனிக்கிழமையன்று முதலாவது தடவை மோதவும் செய்தார்.

சரித்திர ரீதியில் இதுவரை எந்த ஒரு விளையாட்டு வீரரும் சுவீடனில் தனது பாலை மாற்றிக்கொண்டு எதிர்ப்பாலினத்தினரின் உயர்மட்டத்தில் விளையாடியதில்லை. கைப்பந்தட்டத்தில் பெண்களின் உயர்மட்டத்தில் விளையாடி தங்கத்தை வென்றிருக்கிறார் லூயி சாண்ட்.

தனது பால் மாற்றும் முடிவை மற்றவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று மிகவும் பயத்துடன் இருந்ததாகக் குறிப்பிடும் லூயி சாண்ட் அதுபற்றி இதுவரை எவருமே தன்னை இகழ்ச்சியாகக் கணித்ததில்லை என்று மகிழ்கிறார். அவர் நிறவெறி, சிறுபான்மையாக வாழ்தல், ஒரினச் சேர்க்கை, பால் மாற்றம் செய்துகொள்தல் போன்றவை பற்றி மேடைகளில் பேசியும் வருபவராகும்.

லூயியின் இணையாக வாழ்பவர் எம்மா பெரிலுண்ட் என்ற உயர்மட்டப் பெண்கள் கால்பந்தாட்ட வீரராகும். எம்மாவும் தனது முடிவை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டதாக லூயி தெரிவிக்கிறார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *