பெரும்பாலான ஐரோப்பியர்கள் சுற்றுலாச் செல்ல விரும்புகிறார்கள், அனேகமாக ஐரோப்பாவுக்குள்ளேயே.
ஐரோப்பிய சுற்றுலாப்பயண அமைப்பின் ஆராய்ச்சியின்படி 70 % ஐரோப்பியர்கள் வரவிருக்கும் நாலு மாதங்களுக்குள் சுற்றுலாவுக்குச் செல்ல விரும்புகிறார்கள். பயணச்சீட்டுகளின் விற்பனையும் கடந்த ஆராய்வைவிட 31 % ஆல் அதிகரித்திருக்கிறது.
ஜனவரி 2022 க்குள் தாம் சுற்றுலாவுக்குப் போகத் திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிடும் ஐரோப்பியர்களில் பாதிப்பேர் இன்னொரு ஐரோப்பிய நாட்டுக்குப் பயணிக்கவே விரும்புகிறார்கள். 35 விகிதமானோர் தமது நாட்டுக்குள்ளேயே பயணிக்க விரும்புகிறார்கள்.
ஐரோப்பாவுக்குள் பயணிப்பதற்கு கொவிட் 19 தடுப்பூசி பெற்றிருத்தல் அவசியம். பெரும்பாலான ஐரோப்பியர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்டிருப்பதால் அவர்களிடையே சுற்றுலாப் பயணம் பற்றிய எண்ணங்கள் தோன்றியிருக்கிறது. 21 % விகிதத்தினரே குறுகிய எதிர்காலத்தில் சுற்றுலாக்களில் ஈடுபட முடியாது என்று நினைக்கிறார்கள். 57 % ஐரோப்பியர்கள் கொவிட் 19 சான்றிதழ்கள் எல்லைகளைக் கடந்து பயணிப்பதை இலகுவாக்கும் என்று நம்புகிறார்கள். 18 % த்தினர் மட்டுமே அச்சான்றிதழ்கள் ஒழுங்காகச் செயற்படாது, எல்லைகள் கடந்த பயணங்களை இலகுவாக்குவது சாத்தியமில்லை என்று சந்தேகப்படுகிறார்கள்.
சுற்றுலாப் பயணிகளிடையே திறந்த வெளி இடங்களுக்குப் போகவிரும்பும் தன்மை அதிகமாகியிருக்கிறது. வரவிருக்கும் மாதங்களில் பயணிக்கத் திட்டமிட்டிருப்பவர்களில் 20 % கடற்கரைப் பகுதிகள், இயற்கை அம்சங்கள் நிறைந்த இடங்களுக்கே பயணிக்கப் போகிறார்கள். 72 % ப்யணத் திட்டக்காரர் ஏற்கனவே தமது பயண ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.
இத்தாலி, ஸ்பெய்ன், கிரீஸ், கிரவேஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளே வெளிநாடுகளுக்குப் பயணிக்கத் திட்டமிடுபவர்களில் பெரும்பான்மையானவர்களின் விருப்பத்திலிருக்கின்றன. 53% பேர் அந்த நாடுகளுக்குக் கோடையில் பயணிக்க விரும்புவதாகத் தெரிவிக்கிறார்கள். 35 % சுற்றுலா விரும்பிகள் தத்தம் நாடுகளில் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
வயதானவர்களில் 44 விகிதத்தினரும் 18 – 24 வயதினரில் 27 விகிதத்தினரும் தத்தம் நாடுகளுக்குள்ளே சுற்றுப்பயணம் செய்ய விரும்புகிறார்கள்.
2021 ம் ஆண்டு மிக அதிகமானவர்களைச் சுற்றுலாவுக்கு ஈர்த்த நாடு கிரீஸ் ஆகும். சுமார் 6 மில்லியன் பேர் அங்கே சுற்றுலா சென்று அந்த நாட்டுக்கு 12 பில்லியன் எவ்ரோக்களை வருமானமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்