காய்ந்து போயிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் எரிநெய் விற்பனைத் தலங்களுக்கு உதவ 10,500 சாரதி விசாக்கள்.
கடந்த வாரம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் உலவிவந்த முக்கிய செய்திகளிலொன்றாக விளங்கியது ஐக்கிய ராச்சியத்தில் எழுந்திருக்கும் பாரவண்டிச் சாரதிகளுக்கான தட்டுப்பாட்டின் விளைவு. எரிபொருட்களைக் காவிச்செல்லும் கொள்கல வண்டிச் சாரதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு நாடெங்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை உண்டாக்கிப் பெருமளவில் வாகனப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது.
அதன் பின்னணிக்கு முக்கிய காரணமாக பிரெக்ஸிட் கட்டுப்பாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஐரோப்பாவின் தொழிலாளிகள் முன்பு போல ஐக்கிய ராச்சியத்தில் தொழில் விசாவின்றி வேலை செய்ய முடியாது. ஐக்கிய ராச்சித்தின் கொவிட் 19 கட்டுப்பாடுகள், வயதாகிவரும் தொழிலாளர்கள் ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கின்றன.
திங்களன்று காலையிலும் ஐக்கிய ராச்சியத்தின் பல பகுதிகளிலும் எரிநெய் போட்டுக்கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அத்தட்டுப்பாடானது பக்க விளைவுகளாக உணவுகளைக் காவிச்செல்லும் பாரவண்டிகளையும் முடக்கியதால் நாட்டில் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாட்டை உண்டாக்கியிருக்கிறது.
ஐக்கிய ராச்சியத்தில் எரிநெய் விற்பனை நிலையங்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் பலவும் ஞாயிறன்றே தமது நிலையங்களில் மூன்றிரண்டு பங்கு முதல் 90 விகிதமானவை வெறுமையாகிவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.
ஐக்கிய ராச்சியத்தின் அரசு தனது கணிப்பீடுகளுக்கு உள்ளாகாத இந்த அவசர நிலைமையைக் கையாளப் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதாகியிருக்கின்றது. அவைகளிலொன்றாக குடிவரவுக் காரியாலயம் மூலமாக பாரவண்டிச் சாரதிகள் உட்பட்ட அவசிய தொழிலாளர்களை ஈர்க்க 10,500 விசாக்களைக் கொடுக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. தவிர நாட்டில் வேலையின்றி வேறு துறையில் இருப்பவர்களுக்கு பயிற்சியளித்துத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சேவைகளில் வேலைகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்களும் அறிமுகப்படவிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்