ஜனவரி 1 முதல் Brexit வெற்றிகரமாக நடந்தேறும் என்று இருதரப்பும் அறிவிப்பு

சுமார் ஒன்பது மாதங்களுக்கும் அதிகமாக இதோ வருகிறது, வராது, சிலவேளை வந்துவிடும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுப் பல இடியப்பச் சிக்கல்களை மெதுவாக எடுத்து முடித்து பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் brexit க்கு பின்னருக்கான ஒற்றுமை ஒப்பந்தத்தைச் செய்து முடித்திருப்பதாக அறிவிக்கிறர்கள்.

எப்படியாயினும் ஒரு வர்த்தக, ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் ஒப்பித்துவிடவேண்டுமென்று இரண்டு பகுதியாரும் சொல்லிக்கொண்டாலும் சில முக்கிய விடயங்களில் ஒன்றுபடுவது மிகக்கடினமாகிவிட்டது. அதில் முக்கியமானது பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்துக் கடலெல்லைக்குள் ஐரோப்பிய நாடுகள் எத்தனை மீன் பிடிக்கலாம் என்பதும், விவசாயப் பொருட்கள் பற்றிய விடயங்களுமாகும். கடல் விலங்குகளை ஐரோப்பிய நாடுகள் பிடிப்பதை முடிந்தளவு வேகமாக முடிந்த அளவுக்குக் குறைக்கவேண்டுமென்பதே பிரிட்டனின் குறிக்கோளாக இருந்தது. அது மொத்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய மதிப்பைக் கொண்டிராவிட்டாலும் அடையாள அளவில் ஐரோப்பிய நாடுகளுக்கு அது ஒரு கௌரவப் பிரச்சினையாக இருந்தது.

அதையடுத்து வரப்போகும் ஒப்பந்தத்தை ஐரோப்பியப் பாராளுமன்றமும் ஏற்றுக்கொள்ளவேண்டும், பிரிட்டிஷ் பாராளுமன்றமும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஐரோப்பிய பாராளுமன்றத்திலோ பல கட்சிகளின், நாடுகளின் ஒற்றுமையான கருத்து இதற்காகத் தேவை. திட்டமிட்ட காலவரையில் ஒப்பந்தம் தயாராகவில்லை என்பதால் ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்பந்தத்தைத் தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளாமல் ஒரு தற்காலிகத் தீர்வாகவே கவனிக்கவிருக்கிறார்கள். 

போரிஸ் ஜோன்ஸனுக்கும், உர்சுலா வண்டர்லேயனுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிரெக்ஸிட்டுக்குப் பிறகான ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகம் பற்றிய ஒப்பந்தம் வரும் வாரங்களில் இரண்டு தரப்பினரின் பாராளுமன்றங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபின் நடைமுறைக்கு வரும். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *