கொஸோவோவுக்கும், செர்பியாவுக்கும் இடையே மீண்டும் உரசல் ஆரம்பித்திருக்கிறது.
சுமார் 20 வருடங்களாகிறது முன்னாள் யூகோஸ்லாவிய நாடுகளுக்கிடையே போர் உண்டாகிப் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து, புதிய எல்லைகள், நாடுகள் உண்டாக்கப்பட்டு. அவர்களிடையே பெருமளவில் அமைதி நிலவினாலும் கூட செர்பியா – கொஸொவோ ஆகியவைகளிடையே அடிக்கடி உரசல்கள் உண்டாகின்றன.
இரண்டு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான கொஸோவோ, தான் ஒரு தனி நாடென்று குறிப்பிட, செர்பியாவோ அதைத் தனது நாட்டின் ஒரு பாகம் என்கிறது. செர்பியாவில் வாழ்பவர்கள் ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவர்கள். ஒத்தமான் சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்து 20 நூற்றாண்டில் யூகோஸ்லாவியாவின் ஒரு பாகமாக மாறிய கொஸொவோவின் பெரும்பாலான குடிமக்கள் முஸ்லீம்களாகும். அவர்கள் அல்பானிய இனத்தவராகும்.
1989 இல் செர்பியா கொஸோவோவைத் தனது பகுதி என்று பிரகடனம் செய்யவே கொஸோவோவின் அல்பானியர்கள் எதிர்த்துப் போரில் ஈடுபட்டார்கள். அப்பிரச்சினையில் அமெரிக்கா கொஸோவோ விடுதலை இயக்கத்தினருக்கு ஆதரவளித்து செர்பியா அப்போரை நிறுத்தும்படி ஐ.நா-வின் ஆதரவுடன் செயற்பட்டது.
போர் ஓய்ந்து அவ்விருவருக்குமிடையே சர்வதேச நடுவருடன் பல முறை பேச்சுவார்த்தைகள் நடந்தும் இதுவரை கொஸோவோவைத் தனி நாடென்று செர்பியா அங்கீகரிக்கவில்லை. உலகின் சுமார் 100 நாடுகள் கொஸோவோவைத் தனி நாடென்று அங்கீகரித்திருக்கின்றன.
கடந்த வாரத்தில் கொஸோவோ தனது எல்லைக்குள் நுழையும் செர்பிய வாகனங்கள் அவர்களுடைய பதிவு இலக்கத்துடன் கொஸோவோ நாட்டு அடையாளத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தது. அதனாலேயே புதிய உரசல் இரு பகுதியினரிடையேயும் ஏற்பட்டிருக்கின்றன. கொஸோவோவில் ஓர்த்தகொக்ஸ் கிறீஸ்துவ தலங்கள் பல இருக்கின்றன. அத்துடன் கொஸோவோவின் வடக்கில் வாழ்பவர்கள் செர்பியர்களாகும். அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் செர்பியப் பகுதியுடன் நெருங்கிய தொடர்புகள் உண்டு.
கொஸோவோவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக செர்பர்கள் தமக்கிடையேயான எல்லையில் குவிந்து கோஷமெழுப்புகிறார்கள். செர்பியா தனது இராணுவம், விமானப்படை ஆகியவற்றை எல்லையில் நடமாட விட்டிருக்கிறது. பதிலுக்கு கொஸோவோவும் தனது இராணுவத்தினரைத் தயார் நிலையில் கொண்டுவந்திருக்கிறது.
இரண்டு நாடுகளும் தமக்கிடையேயான சிக்கலைச் சுமுகமாகப் பேசித் தீர்க்கவேண்டும் என்று சர்வதேசம் அறிவுறுத்தியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்