போலி அடையாளங்களைப் பாவித்து நாட்டைவிட்டு ஓடியவர்களை விசாரிக்கும்படி ஆப்கான் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.
காம் ஏயர் என்ற ஆப்கானியத் தனியார் விமான நிறுவனம் நாட்டிலிருந்து பத்திரிகையாளர்களையும், தகைமையுள்ள சிலரையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது. வெளியேற்றவேண்டியவர்களுக்குப் பதிலாக காம் ஏயரின் உயரதிகாரிகளும் அவர்களின் குடும்பங்களையும் சேர்ந்த 155 பேர் அதில் ஏறிச் சென்றுவிட்டதாகத் தெரியவந்திருக்கிறது. போலியான அடையாளங்களில் தமக்குப் பதிலாக ஓடித் தப்பியவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆப்கானின் பத்திரிகையாளர்கள் கோரியிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட விமானம் எமிரேட்ஸில் இறங்கிய பின்னரே அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வெளியேற்றப்பட்டிருக்க வேண்டியவர்களின் பட்டியலில் இருந்தவர்கள் விமானத்தில் இல்லாததைத் தெரிந்துகொண்டது. விமான நிறுவனத்தின் ஊழியர்களின் விபரங்களின்படி நிறுவனத்தின் நிர்வாகியின் உறவினர்கள் பலர் அவ்விமானத்தில் பயணித்ததாகத் தெரிகிறது. அப்பயணிகள் தொடர்ந்தும் அபுதாபியில் இருப்பதாகவும் அவர்களின் விலாசங்கள் தெரியவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
திங்களன்று ஆப்கான் தலைநகரில் நாட்டின் பத்திரிகையாளர் சங்க உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.
“எங்கள் உறுப்பினர்களின் அடையாளங்களைச் சிலர் பாவித்து நாட்டுக்கு வெளியே தப்பியோடியிருக்கிறார்கள். அது எங்களுக்கு மிகவும் வேதனையை உண்டாக்குகிறது. வெறும் 100 டொலர்களுக்கு இங்கே போலி ஆவணங்கள் கிடைக்கும்,” என்கிறார் அவ்வமைப்பின் தலைவர் ஹுஜத்துல்லா முஜத்தாதி.
“போலியான அந்த ஆவணங்களை விநியோகித்த அந்த அமைப்புக்களை நாம் தெரிந்துகொள்ள முயல்கிறோம். அவைகளையும், அப்போலி ஆவணங்களைப் பாவித்தவர்களையும் சர்வதேச அமைப்புக்கள் தெரிந்துகொண்டு வெளிப்படுத்தவேண்டும், தண்டிக்கவேண்டும்,” என்கிறார் அவர்.
சாள்ஸ் ஜெ. போமன்