பார ஊர்திச் சாரதிகள் பற்றாக்குறை. எரிபொருள் நிலையங்கள் வற்றின! இராணுவத்தைக் களமிறக்க முடிவு
பிரிட்டனைத் தாக்குகிறது பிரெக்ஸிட்!
பார ஊர்திகளின் சாரதிகளுக்கு ஏற்பட்டபெரும் பற்றாக்குறையால் இங்கிலாந்தில் பெற்றோல் விநியோகம் முடங்கியுள்ளது. பெரும்பாலான நிலையங்கள் எரிபொருள் சேமிப்பு இன்றி வற்றியுள்ளன.
விநியோகத்தைச் சீராக்குவதற்கு இராணுவத்தினரது உதவி நாடப்பட்டுள்ளது. படையினரது டாங்கிகளைச் செலுத்தும் சாரதிகள் எரிபொருள் பவுஸர்கள் மூலம் பிரதான நிலையங்களுக்கு பெற்றோலை விநியோகிப்பதற்குத் தயாராகி வருகின்றனர். முதற் கட்டமாக 150 இராணுவச் சாரதிகள் அப் பணியில் ஈடுபடவுள்ளனர் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த நான்கு நாட்களாக எரிபொருள்நிலையங்களில் நீண்ட வாகன வரிசைகளும் பெரும் குழப்பங்களும் காணப்படுகின்றன. தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் எனஅஞ்சுவோர் பதகளிப்பட்டுத் தேவைக்குஅதிகமாகப் பெற்றோலை வாங்குவதாலேயே (panic buying) செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற பணி நிலையினருக்குமுன்னுரிமை அடிப்படையில் பெற்றோல்வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் அரசு பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு கொரோனா வைரஸ் நெருக்கடியைக் காரணம் காட்டுகிறது. ஆனால் பிரெக்ஸிட் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதன் உடனடி விளைவுகளே அதற்குக் காரணம் என்று அவதானிகள் கூறுகின்றனர்.
பிரெக்ஸிட் விதிமுறைகளை அடுத்து சுமார் 20 ஆயிரம் வெளிநாட்டு சாரதிகள்நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்களது இடங்களுக்கு உள்நாட்டில் சாரதிகளைப் பயிற்றுவிக்கும் நடவடிக்கைகள் கொரோனா நெருக்கடியால் தாமதமாகியுள்ளன. கடந்த ஆண்டு இறுதியிலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் சுமார் 40 ஆயிரம் பார ஊர்திச் சாரதிப் பயிற்சியாளர்களின்பரீட்சைகள் ரத்துச் செய்யப்பட்டன என்றுஅதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளிலும் பொருள்களை விநியோகிக்கின்றபார ஊர்திகளது சாரதிகளுக்குப் பற்றாக்குறை நிலவி வருகின்றது.ஆனாலும் இங்கிலாந்தில் தற்போது உருவாகியிருக்கின்ற பெற்றோல் நெருக்கடி பிரெக்ஸிட் காரணமாக எழுந்த அதன் பின் விளைவுதான் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
ஜேர்மனியில் அடுத்த சான்சிலராகப் பதவிக்கு வரவிருக்கின்ற ஓலாஃப்ஸ் சோல்ஸ் இங்கிலாந்து நிலைவரம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ஜரோப்பிய ஒன்றியத்துடனான கட்டுப்பாடற்ற போக்குவரத்தில் இருந்து விலகியமையே பிரிட்டனின் இந்த நெருக்கடிக்குக் காரணம் எனக் கூறியிருக்கிறார்.
பிரான்ஸின் ஜரோப்பிய விவகார அமைச்சர் கருத்து வெளியிடுகையில் பிரெக்ஸிட்டின் பின் விளைவுகள் பற்றிய போதிய அறிவின்மையே பெற்றோல் நெருக்கடி ஏற்படக் காரணம் என்று தெரிவித்திருக்கிறார்.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்குப் பிந்தியவெளிநாட்டுக் குடியேற்றக் கொள்கைகளுக்குப் புறம்பாக சுமார் 10 ஆயிரத்து500 சாரதிகளைக் குறுகிய – மூன்று மாதகால-வீஸா வழங்கி நாட்டுக்குள் அழைப்பதற்கு பொறிஸ் ஜோன்சன் அரசு தீர்மானித்துள்ளது.
சாரதிகள் பற்றாக்குறை நீடித்தால் வரும்நத்தார் பண்டிகைக் காலப் பகுதியில்உணவு மற்றும் அத்தியாவசியப்பொருள்களின் விநியோகம் சீர்குலையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.