எப்போலாத் தொற்றின் சமயத்தில் கொங்கோவுக்கு உதவச் சென்றவர்களில் 80 பேர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டார்கள்.

பெருந்தொற்று வியாதியான எப்போலா கிழக்கு கொங்கோவில் 2018 – 2020 காலத்தில் பரவியபோது உதவச்சென்ற உத்தியோகத்தர்களில் 83 பேர் பாலியல் குற்றங்கள் பலவற்றில் ஈடுபட்டதாக 51 பெண்கள் குற்றஞ்சாட்டினார்கள். உலக ஆரோக்கிய அமைப்பின் ஊழியர்கள் 21 பேர் உட்பட்ட அவர்கள் மீது நடாத்தப்பட்ட விசாரணையில் அவை உண்மையென்று தெரியவந்திருக்கிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை அடுத்து உலக ஆரோக்கிய அமைப்பின் தலைவர் அட்னான் கபிரியேஸுஸ் அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை உத்வேகத்துடன் ஒலிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உட்பட்ட உலக ஆரோக்கிய அமைப்பிற்கு நன்கொடை அளிப்பவர்கள் உதவி அமைப்புக்களின் மீதான நம்பிக்கையை இழக்காமல் இருக்கும் நடவடிக்கையை எடுக்கவேண்டுமென்று குரலெழுப்பியிருக்கிறார்கள்.

உலக ஆரோக்கிய அமைப்பின் தலைவர் அட்னான் கபிரியேஸுஸ் அடுத்த ஐந்து வருடங்கள் தனது பதவியில் தொடர விரும்புகிறார். அப்பதவிக்கு வேறெவர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பது ஒக்டோபர் 23 ம் திகதி தெரியவரும். 2022 மே மாதத்தில் அடுத்த ஐந்து வருடத்துக்கான தலைவர் யாரென்று முடிவு செய்யப்படும். புதிய தவணைக்கு அவர் விண்ணப்பித்திருக்கும் இச்சமயத்தில் அந்த அமைப்பின் ஊழியர்களின் தவறான நடவடிக்கைகள் பற்றி அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று பலரும் கவனித்து வருகிறார்கள்.

தற்போதைய நிலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளும், அமெரிக்காவும், மற்றும் பல உலக நாடுகளும் அட்னான் கபிரியேஸுஸ் அப்பதவியில் தொடர்வதை ஆதரித்திருக்கின்றன. ஆனால், அவரது சொந்த நாடான எத்தியோப்பியா இம்முறை அவருக்குப் பின்னால் நிற்கவில்லை. மற்றைய பெரிய ஆபிரிக்க நாடுகள் அவர் பதவியில் தொடர்வதை ஆதரிக்கின்றன.

எப்போலாப் பெரும் தொற்று கொங்கோவில் பரவியிருந்த சமயத்தில் 12 தடவைகள் அட்னான் கபிரியேஸுஸ் 14 தடவைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்திருக்கிறார். அச்சமயத்தில் அங்கே நடந்துகொண்டிருந்தவை பற்றித் தனக்கு எவருமே குறிப்பிடவில்லை என்கிறார் அவர்.

பாலியல் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் உயரதிகாரிகளுக்கு அவ்விடயங்களில் தொடர்பு இல்லை என்று குறிப்பிடுகிறது. ஊழியர்கள் மட்டத்தில் நடந்த வன்புணர்வு உட்பட்ட குற்றங்களை மறைப்பதில் அமைப்பின் உயர் மட்ட அதிகாரிகள் ஈடுபடவில்லை என்று அது குறிப்பிடுகிறது. 

அட்னான் கபிரியேஸுஸ் தான் தனது அமைப்பினரிடையே ஏற்படும் குற்றங்கள் எதையும் பொறுக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டு வருகிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்