அமெரிக்க நிறுவனங்களில் தடுப்பூசியை பைடன் கட்டாயமாக்கியதற்கு நீதிமன்றம் தற்காலிகத் தடை.
100 பேர்களை ஊழியர்களாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தனியார் நிறுவனங்களில் அனைவருமே தடுப்பூசி போட்டிருக்கவேண்டும். இல்லையேல், அவர்கள் இரு வாரங்களுக்கு ஒரு தடவை தமக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ளவேண்டும் என்ற் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.
ஜனவரி 04 ம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவிருக்கும் கொவிட் 19 தடுப்பூசிக் கட்டாயம் அமெரிக்காவின் 84 மில்லியன் ஊழியர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களுக்கு உரியதாகும். அந்த ஊழியர்களில் 30 மில்லியன் பேர் இதுவரை தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளவில்லை என்று கணிப்பிடப்படுகிறது.
வரவிருக்கும் நத்தார், புது வருடப் பண்டிகைகளில் ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு, போக்குவரத்துத் தட்டுப்பாடு ஆகியவை ஏற்படாமல் தடுக்கவே அச்சட்டம் ஜனவரி 04 ம் திகதி முதல் அமுலுக்கு வரவிருக்கிறது. நிறுவனங்கள் தமது ஊழியர்களிடையே அதை அமுல்படுத்தாவிடின் தலைக்கு 14,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பதவியிலிருந்து விலக்கப்படுவார்களா என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.
மேலுமொரு சட்டத்தின் மூலம் அமெரிக்க அரசின் உதவித் தொகையை முழுவதுமாகவோ, பகுதியாகவோ பெறும் முதியோர் இல்லங்கள், மருத்துவசாலைகளில் ஊழியர்களாக இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்து விட்டு வேலை செய்ய முடியாது. தடுப்பூசி போடாவிட்டால் வேலையிலிருந்து நிறுத்தப்படுவார்கள்.
வெள்ளை மாளிகையிலிருந்து அறிவிக்கப்பட்ட அந்தச் சட்டத்தைப் பற்றிய மேலதிக விபரங்கள் கேட்டு அமெரிக்காவின் முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக அதை நிறுத்தியிருக்கிறது. ஆனாலும், அச்சட்டம் திட்டமிட்ட திகதியில் அமுலுக்கு வரும் என்கிறது வெள்ளை மாளிகைச் செய்திகள்.
சுமார் 222 மில்லியன் அமெரிக்கர்கள் ஒரு தடுப்பூசியையாவது பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். 80 மில்லியன் பேர் இதுவரை தடுப்பூசிகளை எடுக்கவில்லை. நாட்டில் 140,000 பேர் தினசரி தொற்றுக்கு உள்ளாகிறார்கள். இறப்பு தினசரி 1,000 க்கு அதிகமாக இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்