கொவிட் 19 ஆல் 28 மில்லியன் மனித வருடங்கள் உலகம் முழுவதிலும் இழக்கப்பட்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட விபரங்களின்படி கொவிட் 19 சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிர்களைக் குடித்திருக்கிறது. உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட இறந்தவர்கள், அவ்வியாதி இல்லாத பட்சத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்கக் கூடும், என்பதை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுப் பார்த்திருக்கிறார்கள்.

உலகின் 37 நாடுகளில் இறந்துபோனவர்களால் 28 மில்லியன் மனித வாழ்க்கை வருடங்கள் குறைந்திருக்கின்றன. நியூசிலாந்து, நோர்வே தாய்வான் ஆகிய நாடுகளை விட மற்ற நாடுகளிலெல்லாம் மனிதர்கள் வாழும் சராசரி வயது குறைந்திருக்கிறது. டென்மார்க்கில் மனிதர்கள் வாழும் சராசரி வயது மாறாமலிருக்கிறது. ரஷ்யா, அமெரிக்கா, பல்கேரியா ஆகிய நாடுகளே மனிதர்கள் வாழும் வயதைப் பெருமளவில் இழந்த நாடுகளாகும். இங்கிலாந்து, வேல்ஸ் ஆகியவற்றில் சராசரி வாழும் வயது ஒரு வருடத்தால் குறைந்திருக்கிறது.

மனிதர்களின் சராசரி வயது பெண்களை விட ஆண்களிடையே அதிகமாகக் குறைந்திருக்கிறது.

கொவிட் 19 இறப்புக்களின் பதியப்பட்ட எண்ணிக்கை உலக நாடுகளில் 5 மில்லியன் பேர் எனினும் உண்மையிலேயே அவ்வியாதியால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதை விட மூன்று மடங்கு அதிகமானது என்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கணிப்பிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்