வறிய நாடுகளுக்கு எப்போ கிடைக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகள்?

உலகமெங்கும் கொரோனாத் தொற்றுக்கள் பரவ ஆரம்பித்தபோது அதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் சகலரும் ஒன்றிணையவேண்டுமென்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட அமைப்பு COVAX. உலகின் 64 % சனத்தொகையை அடக்கிய 150 நாடுகள் அதில் சேர்ந்தன. 60 பணக்கார நாடுகள் சேர்ந்துகொண்டன. அதில் சேர்ந்துகொள்ள மறுத்தது டிரம்ப் அரசு. தவிர சீனாவும், ரஷ்யாவும் சேரவில்லை.

பணக்கார நாடுகள் பெரும் தொகையை முன்னராகவே முதலீடு செய்ததுடன் தமக்குத் தேவையானவை எத்தனை என்று கணிப்பீடு செய்து அவைகளுக்கான பணத்தையும் ஒதுக்கி ஒப்பந்தம் செய்துகொண்டன. 9 பில்லியன் தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் தமக்குத் தேவையென்று ஒப்பந்தம் செய்துகொண்டபோது தயாரிப்பாளர்கள் ஒரு வருடத்தில் 12 பில்லியன் மருந்துகளைத் தயாரிக்கமுடியுமென்றார்கள். 

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் புழக்கத்துக்கும் வரப்போகின்றன. நிஜத்தின் வெளிப்பாடு COVAX அமைப்பின் திட்டங்கள் வெற்றியடையவில்லையென்று காட்டுவதாகவே குறிப்பிடப்படுகிறது. பிரிட்டன், கனடா, பஹ்ரேன், சவூதி, சிங்கப்பூர் என்று ஒவ்வொரு நாடுகளாக தடுப்பு மருந்துகளைப் பெற ஆரம்பித்துவிட்டன. வறிய நாடுகளுக்கு எதுவுமே இதுவரை தயாராகவில்லை. அவைகளுக்கான தடுப்பு மருந்துகள் எவையாவது முதலாவது வருடத்தினுள் கிடைத்தாலே அதிர்ஷ்டம் என்றே குறிப்பிடப்படுகிறது.

முதல் கட்டத்தில் 200 மில்லியன் தடுப்பு மருந்துகளுக்கும் இரண்டாவது கட்டத்தில் மேலும் 500 மில்லியன் தடுப்பு மருந்துகளுக்குமே சட்டப்படி எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் தயாராகியிருப்பதாகத் தடுப்பு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகம் குறிப்பிடுகிறது. அவைகளைப் பெறப்போகிறவை பணக்கார நாடுகளே. 

அடுத்த பிரச்சினையாகக் குறிப்பிடப்படுவது போக்குவரத்தும் விநியோகமும். தயாரிப்புக்கள் நடந்து மருந்துகள் தயாராக இருப்பினும் அவைகளைத் தேவையான இடத்துக்குக் கொண்டு சேர்க்கும் போக்குவரத்து மற்றும் விநியோக வசதிகளைத் தயார்செய்வது பணக்கார நாடுகளுக்கே மிகப்பெரும் சவாலாகியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இப்படியான நிலையில் வறிய நாடுகளிடம் அப்படியான வசதிகள் உண்டாக்கப்பட எத்தனை காலமாகும் என்பது மிகப்பெரும் கேள்விக்குறி.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *