பக்தாத்தில் பிரதமர் இல்லம் மீது ட்ரோன் வெடிகுண்டுத் தாக்குதல்!
ஈராக்கின் புதிய பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் (Mustafa al-Kadhimi)பக்தாத் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் அவர் உயிர் தப்பிவிட்டார். பாதுகாவலர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.
தலைநகரில் அமெரிக்கா உட்பட முக்கிய வெளிநாடுகளின் தூதரகங்கள் அமைந்திருக்கின்ற பசுமை வலயத்தில்(Green Zone)உள்ள பிரதமரது வாசஸ்தலத்தின் மீதே இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் தாக்குதல் நடந்தது. பிரதமரது இல்லத்தை ரொக்கெட் குண்டு ஒன்றே தாக்கியதாக முதலில் செய்திகள் வெளியாகிஇருந்தன. ஆனால் அது வெடிகுண்டுபொருத்தப்பட்ட “ட்ரோன்” வானூர்தி ஒன்றின் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் என்று பிரதமர் அலுவலகம் பின்னர் உறுதி செய்தது.கொலை முயற்சியில் பிரதமர் காயமடைந்ததாகப் பரவிய செய்திகளால் பக்தாத் நகரில் பதற்றம் நிலவியது.
தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. அமைதி பேணுமாறு பிரதமர் அல்-காதிமி நாட்டு மக்களைக் கேட்டிருக்கிறார். கொலை முயற்சியைக் கண்டித்துள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், விசாரணைகளுக்கு உதவி வழங்க முன்வந்துள்ளது.
சேதமடைந்த ட்ரோன் விமானத்தின் பாகங்களை விசாரணையாளர்கள் மீட்டிருக்கின்றனர். பலத்த பாதுகாப்பு மிக்க அந்த வலயத்தினுள் ட்ரோன் ஊடுருவியது ஆச்சரியமளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் கடந்த ஒக்ரோபர் 10 திகதி நடந்த தேர்தலுக்குப் பின் குழப்பமான நிலை காணப்படுகிறது. தேர்தலில் முறைகேடுகள் நடந்தன என்று தெரிவிப்போர் தலைநகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளியன்று பிரதமர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டங்களில் பிரதமரது பாதுகாவலர்கள் காயமடைய நேரிட்டது.
ஈரானிய ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களது செல்வாக்குடையவர்களே தேர்தல் முறைகேடுகளை எதிர்த்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது. நாட்டின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளராகிய முஸ்தபா அல்-காதிமி கடந்த மே மாதமே பிரதமராகப் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார்.
—————–குமாரதாஸன். பாரிஸ்.