சைகை மொழியால் தான் ஆபத்திலிருப்பதாகக் காட்டிய இளம் பெண் காப்பாற்றப்பட்டாள்.
வீட்டுக்குள் நடக்கும் வன்முறைகளில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள் உதவி வேண்டிக் காட்டவேண்டிய சைகையை ஒரு இளம் பெண் ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்திலிருந்து காட்டியதை இன்னொரு சாரதி கவனித்தார். அவர் உடனடியாக அமெரிக்காவில் அவசரகால உதவிக்காகக் கூப்பிடவேண்டிய 911 இலக்கத்துடன் தொடர்புகொண்டார்.
தொலைபேசியில் விபரங்களை அறிந்துகொண்ட கெண்டக்கி மாநிலப் பொலீசார் உடனடியாகத் தேடும் வேட்டையில் இறங்கினார்கள். அதே மாநிலத்தின் சிறிய ஊரொன்றில் அந்தக் கார் ஓடிக்கொண்டிருந்ததை நிறுத்தியபோது அதற்குள் அப்பெண் இருந்ததைக் கண்டுபிடித்தார்கள்.
வடக்குக் கலிபோர்னியாவில் செவ்வாயன்று வீட்டிலிருந்து காணாமல் போயிருந்ததாகப் பெற்றோர்களால் தேடப்பட்டு வந்த 16 வயதுப் பெண்ணே காருக்குள் இருந்தாள். அவளைக் காருக்குள் வைத்திருந்த 61 வயது நபரைப் பொலீசார் கைது செய்து பெண்ணை மீட்டார்கள். அவளது வயது கருதி அவளுடைய பெயர், விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அவள் செய்த “ஆபத்திலிருக்கிறேன், உதவி தேவை,” என்ற சைகை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் பெண்களுக்கு உதவும் அமைப்புக்களால் கொரோனாக் கால ஆரம்பகாலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அச்சமயத்தில் கட்டுப்பாடுகளால் வீடுகளுக்குள் வாழவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டதால் பெண்கள், பிள்ளைகள் மீதான வன்முறைகள் குடும்பங்களில் அதிகரித்தது. அச்சமயத்தில் இரகசியமாக மற்றவர்களுக்குத் தமது நிலைமையைத் தெரிவித்து உதவி கேட்கவே அச்சைகை அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகின் பல நாடுகளிலும் சமூகவலைத்தளங்கள் மூலம் அச்சைகையின் விபரங்கள் பரப்பப்பட்டிருந்தன. அதையே அந்தப் 16 வயது இளம்பெண் தனக்கு உதவி வேண்டிப் பாவித்திருந்தாள்.
சாள்ஸ் ஜெ. போமன்