பாகிஸ்தான் தலிபான் அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு என்ற பெயரில் அழைக்கப்படும் தீவிரவாத இஸ்லாமிய இயக்கத்தின் பெயர் தஹ்ரீத் எ தலிபான். ஆப்கானிஸ்தான் தலிபான்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாத அந்த அமைப்பு பாகிஸ்தான் அரசாங்கத்தை வீழ்த்தி அங்கு தமது ஷரியா இஸ்லாம் நாடொன்றை அமைப்பதற்காகப் போராடி வருகிறது. 

டிரம்ப் காலத்தில் சர்வதேசத் தீவிரவாத இயக்கமாகப் பிரகடனப்படுத்த பாகிஸ்தானியத் தலிபான் இயக்கம் இவ்வருட ஆரம்பத்தில் பாகிஸ்தானிய அரசுக்கெதிரான பெரிய போராட்டங்களில் ஈடுபட்டது. அதன் விளைவாக அந்த இயக்கம் பாகிஸ்தானிலும் ஒரு தீவிரவாத இயக்கம் என்று குறிப்பிடப்பட்டுத் தடை செய்யப்பட்டுள்ளது. இயக்கத்தின் தலைவர் முப்தி நூர் வலி மெஹ்சூத் சர்வதேசத் தீவிரவாதிகள் பட்டியலில் அமெரிக்காவால் இணைக்கப்பட்டிருப்பவராகும். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு பாகிஸ்தானியத் தலிபான்கள் தமது அரசுக்கெதிராகவும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் உதவியுடன் இரு தரப்பாருக்கும் இடையே ஒரு மாத முழுப் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கிறது. டிசம்பர் 09 திகதிவரை இரண்டு தரப்பாருக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருக்கிறது.

“தேசிய இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு, சமூக பொருளாதார வளர்ச்சி, நிலையான அமைதி ஆகியவைக்கு முன்னுரிமை கொடுத்து இப்பேச்சுவார்த்தைகள் நடாத்தப்படும் என்று பாகிஸ்தானிய அரச பிரதிநிதி தெரிவித்திருக்கிறார். 

ஒரு மாத காலமாகவே இப்பேச்சுவார்த்தைகள் ஆப்கானிஸ்தானில் நடக்க ஆரம்பித்திருப்பதாகவும் வெளிப்படுத்தப்பட்டது. பாகிஸ்தானிய தலிபான்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து கொண்டே பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியங்களில் தாக்கி வருகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் இவர்களுக்கிடையேயான போரில் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரக்கணக்கானோர் அகதிகளாகியிருக்கிறார்கள்.

நோபல் அமைதிப்பரிசைப் பின்னர் பெற்ற பாகிஸ்தான் சிறுமியான மலாலா யுசுபாயைக் கொல்ல முயற்சி செய்தது பாகிஸ்தான் தலிபான்களே என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்