பருவநிலை மாநாட்டை ஒட்டி கடல் தண்ணீரில் நின்றவாறு அமைச்சர் அபாய எச்சரிக்கை!
பசுபிக் கடலில் உள்ள சின்னஞ் சிறுநாடான துவாலு (Tuvalu) தீவின் வெளிநாட்டு அமைச்சர் பருவநிலை மாநாட்டு தலைவர்களுக்குக் கவன ஈர்ப்பு உரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
கடற்கரையில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்றவாறு அவர் வழங்கிய பருவநிலை மாநாட்டு உரை உலகம் எங்கும்சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
வெப்பம் அதிகரிப்பதால் பல நாடுகளும் பல்வேறு விதமான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. குட்டித் தீவுகளைப் பொறுத்தவரை வாழ்வா சாவா என்றநிலை. பசுபிக் சமுத்திரத்தில் உள்ள சின்னஞ் சிறு தீவுகளின் ஆயுள் காலம் இன்னும் 50 வருடங்கள் மட்டுமே என்று கணிப்பிடப்படுகிறது.
கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதனால் மறைந்து போகின்ற ஆபத்தில் உள்ள தீவுக் கூட்டங்களில் ஒன்று துவாலு (Tuvalu). தென் பசுபிக் கடலில் பிரிட்டிஷ் பொதுநலவாயத்தின் கீழ் அடங்குகின்றசுதந்திரமான தீவு நாடு அது. பவளப்பாறைகள் கொண்ட அழகிய கடற்கரை மற்றும் கடற்பறவைகளுக்கு அடைக்கலம் வழங்குகின்ற மக்கள் வசிக்காத சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு அது.
ஆனால் அது மிக வேகமாக கடலில்அமிழ்ந்து வருகிறது. இன்னும் 50 வருடங்களில் அந்த நாடு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. துவாலுவும் அது போன்று ஆபத்தை எதிர்கொள்கின்ற நூற்றுக்கணக்கான தாழ்ந்த தீவுக் கூட்டங்களையும் பாதுகாப்பதே கிளாஸ்கோ மாநாட்டின் முதல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாகஉள்ளது என்பதை வலியுறுத்துவதற்காகவே அமைச்சர் சைமன் கோஃப்(Simon Kofe) இவ்வாறு ஒரு வீடியோஉரையை நீரில் நின்று ஆற்றியிருக்கிறார்.
இது ஒரு சாதாரணமான அரசியல் உரை அல்ல. பருவநிலை மாற்றமும் கடல் மட்டஉயர்வும் எங்களைப் போன்ற தீவு நாடுகளுக்கு மரண அச்சுறுத்தலாக மாறியுள்ளன.நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இங்கே நாங்கள்உணர்கின்ற ஆபத்தை அடுத்த நூறுஆண்டுகளில் உலகம் முழுவதும் உணரும். எதையாவது செய்யாமல் இங்கே நாங்கள் இருந்துவிட முடியாது.வெப்பநிலையை 1.5 ° C என்ற அளவில்வரையறை செய்வது என்ற இலக்கை மாநாட்டின் பங்காளிகள் மதித்து நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பாக்கின்றோம்.
இவ்வாறு துவாலுத் தீவின் வெளிநாட்டமைச்சர் தனது வீடியோ உரையில் மன்றாடியுள்ளார்.
குமாரதாஸன். பாரிஸ்.