இரண்டாவது தடவையாக சூடான் மக்கள் தமது சர்வாதிகார ஆட்சியைப் பதவியிலிருந்து விலக்கினார்கள்.
சூடானில் இடைக்கால அரசாகச் செயற்பட்டுவந்த அரசாங்கத்தின் தலைவர்களைக் கைதுசெய்து தனது கையில் ஆட்சியை எடுத்துக்கொண்ட சூடானிய இராணுவத் தலைவர் மீண்டும் நாட்டின் பிரதமராக்க அப்துல்லா ஹம்டொக்கைப் பதவியிலமர்த்த ஒப்புக்கொண்டிருக்கிறார். கைதுசெய்யப்பட்டிருந்த அமைச்சர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்.
ஒக்டோபர் 25 ம் திகதி தமது நாட்டின் தலைமையைப் புடுங்கிக்கொண்ட இராணுவத்த தளபதி அப்துல் பத்தா அல்-புர்கானுக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து போராடினார்கள். பலர் கொல்லப்பட்டபோதும் தளராமல் குரல் கொடுத்துவந்த மக்களின் கோரிக்கை பலித்திருப்பதாகத் தெரிகிறது. நாட்டின் அரசை மீண்டும் பதவியிருத்தத் தாம் சகல ஏற்பாடுகளையும் செய்வதாக உறுதிகூறியிருக்கிறது இராணுவத் தலைமை.
ஐ.நா-வின் தூதுவர்கள், வல்லரசுகளின் பிரதிநிதிகள் உட்பட நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க விரும்பும் சக்திகளின் அங்கத்தவர்களும் சேர்ந்த கடந்த வாரங்களில் இராணுவத்தலைமையுடனும், சிறைவைக்கப்பட்ட அரசாங்கத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்கள். அதன் விளைவாகவே அல்-புர்கான் அதிகாரங்களை விட்டிறங்க ஒப்புக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதுவரை நடந்த மக்கள் கிளர்ச்சிகளில் இராணுவத்தினர் 40 க்கும் அதிகமானோரைக் கொன்றிருக்கிறார்கள். இராணுவத்தின் செய்தியைக் கேட்டபின்னரும், மக்கள் ஞாயிறன்று தொடர்ந்தும் தாம் திட்டமிட்டிருந்தபடி வீதிகளில் போராட்டத்தைத் தொடரப்போவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை ஒன்றுபடுத்திப் போராட்டங்களை நடாத்துவதில் சூடானின் தொழிற்சங்கம் முக்கிய பங்கெடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்