திருகோணமலையில் கிண்ணியாவை நோக்கிச் சென்ற போக்குவரத்துப் படகு கவிழ்ந்ததில் நாலு சிறார்கள் உட்பட ஆறுபேர் இறந்தனர்.
குறிஞ்சங்கார்ணிக்கும் கிண்ணியாவுக்கும் இடையே பயணிகளைக் கொண்டுசெல்லும் படகு ஒன்று செவ்வாயன்று கவிழ்ந்ததில் ஆறு பேர் இறந்திருக்கிறார்கள். பனிரெண்டு பேர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் நால்வர் பிள்ளைகள் என்பது ஊர்ஜிதமற்ற மருத்துவமனைச் செய்திகள் மூலம் கசிந்திருக்கிறது.
மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். விபத்துக்குக் காரணம் உள்ளூர் அரசியல்வாதிகளே என்ற கோபம் மக்களிடையே எழுந்திருக்கிறது. விளைவாக, அப்பகுதியில் அரசின் காரியாலயங்கள் நொறுக்கப்பட்டதுடன், டயர்களை எரித்தும் வருகிறார்கள். பதற்றமான நிலைமை அப்பகுதியில் நிலவுகிறது.
இது போன்ற போக்குவரத்துப் படகு விபத்துக்கள் சிறிலங்காவில் அரிதாகும். குறிப்பிட்ட நீர்வழியை பாலம் மூலம் இணைக்கும் திட்டம் இவ்வருடம் ஏப்ரலில் அடிக்கல் கட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அத்திட்டம் முழுசாக நிறைவேற்றப்படாமல் அரசியல் காரணங்களால் இழுபட்டு வருவதாகவும் மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்