சுவீடனில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோருக்கும் மூன்றாவது தடுப்பூசி உட்பட புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும்!
தொடர்ந்தும் சுவீடனில் கொரோனாப் பரவல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. மருத்துவமனையில் கடும் நோயுடன் அனுமதிக்கப்பட்டோர், இறந்தோ அளவு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. ஆயினும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் மோசமான பரவலைக் கருத்தில் கொண்டு சுவீடன் அரசும் சில கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கின்றது.
கடந்த வருடம் கொவிட் 19 ஆல் பெருமளவில் பாதிக்கப்பட்டும் எவ்வித முடக்கங்களையும் அறிவிக்காத ஐரோப்பிய நாடு சுவீடன் மட்டுமே. தொடர்ந்தும் அதே போல எவ்வித கட்டாய முடக்கங்களும் அமுலுக்குக் கொண்டுவரும் நோக்கம் இல்லையென்று நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் தெரிவித்தார்.
டிசம்பர் 01 ம் தேதிமுதல் 100 – பேருக்கும் அதிகமானோர் பங்குபற்றும் நிகழ்வுகளில் தடுப்பூசிச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்குத் தொற்றுப் பரவாமலிருப்பது கவனிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் கொவிட் 19 இல்லையென்ற சான்றிதழைக் கொண்டோருக்கும், தொற்று வந்தோருக்கும் 100 பேருக்கும் அதிகமானோர் பங்குபற்றும் நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதியளிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோரிடையேயும் 82 விகிதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கின்றன. சில வாரங்களாகவே + 65 மூன்றாவது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. + 18 வயதுள்ளவர்கள் அனைவருக்குமே மூன்றாவது தடுப்பூசி கொடுக்கப்படும். அது இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொண்ட 6 மாதங்களின் பின்னர் கொடுக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்