பிரான்ஸில் ஒரு டசின் பேருக்கு ‘ஒமெக்ரோன்’ தொற்று அறிகுறி!

முடிவுகள் சில மணிநேரங்களில்தெரியவரும் என்கிறார் அட்டால் .

ஐரோப்பிய நாடுகளில் “ஒமெக்ரோன்” வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படுவது தொடர்கிறது.பிரான்ஸில் அதன்தொற்றுப் பரவல் உள்ளதா?

அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டாலிடம் செய்தியாளர்கள் இவ்வாறு வினவியுள்ளனர்.

“நாங்கள் இப்போது ஆரம்ப கட்டத்தில்இருக்கிறோம். சந்தேகத்துக்குரிய சுமார் ஒரு டசின் பேரது தொற்றுக்கள் மேலதிக பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளன.அடுத்த சில மணி நேரங்களில் முடிவு தெரியவரும். தொற்றுக்குச் சாத்தியமான நிலைவரம் உள்ளது.”

-இவ்வாறு கப்ரியேல் அட்டால் பதிலளித்திருக்கிறார். இன்று முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர்ஒலிவியே வேரன்,” ஒமெக்ரோன்”திரிபுஏற்கனவே நாட்டுக்குள் பரவியிருக்கலாம் – என்று எச்சரித்திருந்தார்.

நாட்டுக்கும் தொற்றுக்கும் இடையே இன்னும் சில மணிநேர இடைவெளி தான் இருக்கிறது என்ற சாரப்பட அவர் கூறியிருந்தார். தென் ஆபிரிக்காவில் இருந்து நெதர்லாந்தின் அம்ஸ்ரடாம் ஷிப்போல் விமானநிலையத்துக்கு வந்த பயணிகளில்-ஹொட்டேலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த-அறுபது பேரில் 13 பேருக்கு”ஒமெக்ரோன்”தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில்அறியவந்துள்ள ஆகக் கூடிய தொற்று எண்ணிக்கை இதுவாகும். ஜேர்மனி,இங்கிலாந்து, பெல்ஜியம், இத்தாலி, இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் புதிய ஆபத்தான இந்தத் திரிபு பரவியுள்ளது.இஸ்ரேல் உலகில் முதலாவது நாடாகசகல வெளிநாட்டுப் பயணிகளுக்கும்தனது எல்லையை மூடியுள்ளது.

இதேவேளை, உலகில் “ஒமெக்ரோன்” தொற்றுநோய் நிலைவரத்தை ஆராய்வதற்காக ஜீ-7நாடுகளின் சுகாதார அமைச்சர்களது அவசர மாநாட்டைக் கூட்டுமாறு பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அழைப்புவிடுத்திருக்கிறார். அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான்,இங்கிலாந்து ஆகிய நாடுகள் அங்கம்வகிக்கின்ற ஜீ-7 அமைப்பின் மாநாட்டைதிங்களன்று கூட்டுமாறு லண்டன் கோரியுள்ளது.

பிரிட்டனில் மூன்று தொற்றாளர்கள்கண்டறியப்பட்டிருப்பதை சுகாதாரப்பாதுகாப்பு முகவரகம் உறுதிப்படுத்திஉள்ளது. முதலாவது தொற்றாளர் லண்டனுக்கு வருகை தந்து மீண்டும் ஆபிரிக்காவுக்குத் திரும்பிவிட்டார். மற்றொருவர்Nottingham (central England) பகுதியிலும்மூன்றாமவர் லண்டனுக்குக் கிழக்கேChelmsford பகுதியிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

அளவுக்கு மீறி அச்சமடைய வேண்டாம். ஒமெக்ரோன் திரிபு தொடர்பான பூரணஆய்வுகள் நடந்துவருகிறன. அதற்குள்அவசரப்பட்டு எல்லைகளை மூடவேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் கேட்டிருக்கிறது. போக்குவரத்துகளைத்தடுத்து எல்லைகளைப் பூட்டியதால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தெற்கு ஆபிரிக்க நாடுகளுக்குச் சார்பாக அது குரல் கொடுத்துள்ளது.

ஒமெக்ரோன் திரிபு தொடர்பில் ஆய்வுகளை தொடர்வதற்கு அறிவியலாளர்களுக்கு அவகாசம் அளித்து தற்காப்பு நடவடிக்கைகளில்கவனம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலாவொன் டெர் லேயன் (Ursula von der Leyen)வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குமாரதாஸன். பாரிஸ்.