கொரோனாக்கால வியாபாரச் செழிப்புடன் உபரி விடுமுறை + ஊக்க ஊதியம் வழங்கப்போகிறது லேகோ நிறுவனம்.

உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் கொரோனாப் பரவலின்போது கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டன. ஆனால், சில துறைகளின் நிறுவனங்களுக்கு மக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டுக் கிடந்த காலம் விற்பனைச் செழிப்பாக இருந்தது. அவற்றிலொன்று டனிஷ் நிறுவனமான லேகோ விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பாளராகும்.

கடந்த வருடத்திலிருந்தே அதிகரித்த லேகோ விளையாட்டுப் பொருட்களின் விற்பனை இவ்வருட முதல் பாதியில் மேலும் அதிகரித்தது. அதனால் நிறுவனத்தின் இலாபம் 140 விகிதத்தால் அதிகரித்திருப்பதாக லேகோவின் பேச்சாளர் பெஞ்சமின் ஹியூட் தெரிவித்தார்.

லேகோவின் 20,000 தொழிலாளர்களுக்குப் பிரத்தியேக நன்றியைத் தெரிவித்த பெஞ்சமின் ஹுயூட் அவர்களுக்கு மூன்று உபரி விடுமுறை நாட்களை அறிவித்தார். அத்துடன் அவர்களுக்கு 2022 ஏப்ரல் மாதத்தில் ஊக்க ஊதியமும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்