சீனாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை அமெரிக்க அரச பிரதிநிதிகள் புறக்கணிப்பார்கள்.
அமெரிக்க அரசின் பிரதிநிதிகளோ, ராஜதந்திரிகள் எவருமோ பீஜிங்கில் விரைவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிப் பந்தயங்களைக் காணப் போகமாட்டார்கள் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் விளையாட்டு வீரர்கள் அப்போட்டிகளில் தங்குதடையின்றிப் பங்குபற்றுவார்கள்.
“சீனா தொடர்ந்தும் குறிப்பிட்ட சிறுபான்மையினரை அழிப்பதில் ஈடுபட்டும், மனித உரிமைகளை மீறுவதிலும் ஈடுபட்டிருப்பதைக் கண்டிக்க, அமெரிக்க அரசு தனது பிரதிநிதிகளையோ, ராஜதந்திரிகளையோ பீஜிங்கில் 2022 இல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பாது,” என்று இதுபற்றி வெள்ளை மாளிகையின் செய்தியாளர் தெரிவித்தார்.
“குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குகொள்ளும் அமெரிக்க வீரர்கள் மீது கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. அவர்களுக்கு நாம் முழு ஆதரவையும், உற்சாகத்தையும் வழங்குவோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அரசின் இந்த முடிவு பற்றிய பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு வெளிவிவகார அமைச்சரின் காரியதரிசி பதிலளித்தார். அரசு எடுத்திருக்கும் முடிவு ஒலிம்பிக்ஸ் போட்டி உபயகார நிறுவனங்களுக்குப் பிரச்சினைகளைக் கொடுக்கலாம் என்பதை ஒத்துக்கொண்ட அவர் தனியார் நிறுவனங்களுக்கு அரசு எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்றார். ஆனால், அவர்கள் நிலைமையைக் கவனத்தில் கொண்டு தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சுட்டிக் காட்டினார்.
அமெரிக்காவின் முடிவைப் பற்றிய சீனத் தூதுவராலய அறிக்கை,”அந்த மனிதர்கள் வராதது பற்றி எங்களுக்கெந்த அக்கறையுமில்லை. நாம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவோம்,” என்கிறது.
ஆஸ்ரேலியா, கனடா ஆகிய நாடுகளும் அமெரிக்கா போன்ற ஒரு முடிவை எடுக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்