செமெரு எரிமலையின் திடீர் வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்தோனேசிய ஜனாதிபதி விஜயம்.

இந்தோனேசியாவின் ஜாவா பிராந்தியத்திலிருக்கும் செமெரு எரிமலை கடந்த வார இறுதியில் திடீரென்று வெடித்தது. கொதிக்கும் எரிமலைக் குழம்புடன் கூடிய, கற்கள், சாம்பல் போன்றவை அம்மலையைச் சுற்றிவர உள்ள 7 மைல் தூரத்துக்கு வீசியெறியப்பட்டன. அதையத்துக் கடும் மழையும் தொடர்ந்தது. எனவே அப்பிராந்தியத்தை எரிமலையிலிருந்து வெளியேறியவை கம்பளி போன்று மூடியதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அந்த எரிமலை வெடிப்பு எதிர்பார்க்கப்படாததால் பாதிப்புகள் மோசமானதாக இருந்தன. 40 பேர் இதுவரை இறந்திருப்பதாகவும் 22 பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் பணியினர் குறிப்பிடுகின்றனர். இறந்தவர்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க இடமிருப்பதாக அவர்கள் எச்சரிக்கிறார்கள். 100 க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோருக்குக் நெருப்பால் எரிந்த கடும் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுமார் 3,000 வீடுகளும் 38 பாடசாலைகளும் இடிபாடுகளாக மாறியிருக்கின்றன.

பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்த மக்களுக்கு தற்காலிகமாக ஆறு மாதங்கள் வேறிடங்களில் தங்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டு அவர்களுக்கு மாதாமாதம் செலவுக்காக நிவாரண ஒழுங்கும் செய்யப்பட்டிருப்பதாக அரசு குறிப்பிடுக்கிறது. செவ்வாயன்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இந்தோனேசிய ஜனாதிபதி விஜயம் செய்தார். மீட்புப் பணிகளைத் துரிதமாக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வுக்கும் ஒழுங்குகள் செய்துகொடுக்கத் தான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்