தூத்துக்குடியில் முப்பெரும் விழா

நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கத்தின் சார்பில், முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

பரதவர் குல மன்னர் பாண்டியாபதியின் 268ஆவது பிறந்தநாள் விழா, நெய்தல் படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பழவேற்காடு முதல் நீரோடி வரையுள்ள 40 க்கும் மேற்பட்ட நெய்தல் எழுத்தாளர்களுக்கு விருதும் பரிசும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வுக்கு முதுமுனைவர் பால் வளன் அரசு தலைமை தாங்கி, நெய்தல் இலக்கியம் எனும் தலைப்பில் தலைமையுரை நிகழ்த்தினார். கலாபன் வாஸ், முட்டம் வால்ட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி பேராசிரியர் அசோகா சுப்பிரமணியம்- நெய்தல் நிலத்தில் வாசிப்பும் படைப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பூம்புகார்க் கல்லூரியின் உதவிப் பேராசிரியை முனைவர் சாந்தகுமாரி தமிழரசன் – நெய்தல் பெண் எழுத்தாளர்களும் சிந்தனைகளும் எனும் தலைப்பின் உரை நிகழ்த்தினார். பழவேற்காடு முதல் நீரோடி வரையுள்ள நெய்தல் எழுத்தாளர்கள் ஒன்று கூட்டப்பட்டு விருதும் பரிசும் அளித்து பாராட்டப்பட்டது .

இயக்கத்தின் ஆண்டறிக்கையை பேராசிரியை பாத்திமா பாபு படித்தார். பரதவர் குல மன்னர் பாண்டியாபதி பற்றிய வரலாற்றுச் செய்தியை நெய்தல் அண்டோ பகிர்ந்து கொண்டார். கவிஞர் லியோனா கவிதை படித்தார். கடலம்மா ஜூடி சுந்தர் நெய்தல் எழுத்தாளர்களை நினைவுகூரும் பாடலைப் பாடினார். தீர்மானம் மணவை வினோஜினால் படிக்கப்பட்டது. நிகழ்வுகளை ஆண்டனி டெலி, தேவ் ஆனந்த் தொகுத்து வழங்கினர். இடிந்தகரை கரிகாலன் நன்றியுரை கூறினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நெய்தல் எழுத்தாளர்கள், வாசகர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நெய்தல் அண்டோ செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் குமரி முதல் புதுவை வரையிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் குடும்பத்துடனும், பல்வேறு நெய்தல் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.