தாய்வானிடமிருந்து தொடர்புகளை முறித்துக்கொண்டு அது சீனாவில் ஒரு பாகம் என்பதை ஏற்றுக்கொண்டது நிக்காராகுவா.
சீனா உலக நாடுகளைத் தாய்வானிடமிருந்து விலக வைப்பதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. அதே சமயம் மேற்கு நாடுகள் தாய்வானுடன் தமது நெருக்கத்தை இறுக்கிக்கொண்டு அது ஒரு தனி நாடு என்பதை ஏற்றுக்கொண்டு வருகின்றன. தாய்வான், ஐக்கிய நாடுகள் சபையில் சேராமல் சீனா தடுத்தும் வருகிறது.
சீனாவின் சமீபத்தைய ராஜதந்திர, பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றாக நிக்காராகுவாவைத் தாய்வானிடமிருந்து விலக்கியிருக்கிறது. நிக்காராகுவா தான் தாய்வானிடமிருந்து சகல ராஜந்தந்திர உறவுகளையும் முறித்துக்கொண்டு அது சீனாவின் ஒரு பகுதி என்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.
“ஒற்றைச் சீனா” கோட்பாட்டின் ஒரு பகுதியே இது என்று குறிப்பிட்ட சீன அரசு நிக்காராகுவாவைப் பாராட்டிச் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதே சமயம் நிக்காராகுவா, தாய்வானின் மக்களின் நட்பை உதறிவிட்டதாக அந்த நாடு வருத்தம் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறது.
நிக்காராகுவா ஜனாதிபதி டானியல் ஒர்ட்டேகா சுமார் 14 வருடங்களாகத் தன் பதவியை எவரிடமும் விடாமல் வைத்திருப்பவர். கடந்த மாதம் அந்த நாட்டில் நடந்த தேர்தலுக்கு முன்னர் தனக்கு எதிராகத் தேர்தலில் நிற்க முன்ற வேட்பாளர்களையெல்லாம் கைது செய்து உள்ளே போட்டார். மேலும் சிலரை வேட்பாளராகத் தகுதியில்லை என்று அறிவித்தார். சர்வதேச ரீதியில் அவரது நடவடிக்கை கண்டிக்கப்பட்டாலும் அவர் தேர்தலை நடத்தி ஆட்சியில் தொடர்கிறார். 2018 முதலே ஒர்ட்டேகா குடும்பத்தினர் மீது அமெரிக்கா பல தடைகளைப் போட்டிருக்கிறது.
தாய்வானின் உதவித்தொகையில் நீண்ட காலமாகத் தங்கியிருந்த நாடு நிக்காராகுவா. நாட்டின் பாடசாலைகள், மக்கள் ஆரோக்கிய சேவை உட்பட பல வகைகளிலும் நிக்காராகுவாவுக்குத் தாய்வான் உதவி வந்திருக்கிறது. நாட்டின் பொலீஸ் துறைக்கு 3 மில்லியன் டொலர்களை நன்கொடையாகக் கொடுத்ததுடன், 100 மில்லியன் டொலரை 2019 இல் அபிவிருத்திக் கடனாகவும் கொடுத்திருக்கிறது.
நிக்காராகுவா உட்பட மூன்று லத்தீன் அமெரிக்க நாடுகள் சமீபத்தில் சீனாவின் நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டங்களில் கையெழுத்திட்டுள்ளன. சீனா அந்த நாடுகளுக்கு உதவி செய்யப்போகும் திட்டங்களுக்கு 3 திரில்லியன் டொலர் கடனாக முதலீடு செய்யவிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்