இயற்கை வாயு, அணுமின்சாரச் சக்தி இரண்டையும் ஐரோப்பிய ஒன்றியம் பச்சைநிறத்துக்கு மாற்றியது.
பாவனைக்கு உட்படுத்தப்படும் எரிசக்திகள் அனைத்தும் இயற்கையைப் பாதிக்காத வகையில் எடுக்கப்பட்டவையாகவும், காலநிலையைத் தொடர்ந்தும் மோசமாக மாற்றாதவையாகவும் இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டில் புதிய வரையறைகளை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்து வருகிறது. அதேசமயம், எரிசக்தி விலையேற்றம், தட்டுப்பாடு ஆகியவை அந்தக் கோட்பாடுகளைக் கடுமையாக வரையறுக்க முடியாமல் தடைசெய்கின்றன.
இப்படியான நிலைமையில் எதிர்காலத்துக்குரிய எரிசக்திகளாகத் தகுதியற்றவை என்று கருதப்பட்ட அணுமின்சாரம், இயற்கை எரிவாயு ஆகிய இரண்டையும் தற்போதைக்குத் தடை செய்யக்கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கோரி வருகின்றன.
பிரான்ஸ், பின்லாந்து, செக் குடியரசு ஆகியவை இடைக்கால நிவாரணமாக அணுமின்சார உலைகளுக்கும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சில இயற்கை எரிவாயுவுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் “பசுமைச்சக்தி” தகைமையைக் கொடுக்கவேண்டுமென்று வேண்டுகின்றன.
வேறு வழியின்றி ஐரோப்பிய ஒன்றியம் அவ்விரண்டு எரிசக்திகளையும் புதிய கட்டுப்பாடுகளுடன் “இடைக்கால நிவாரண பசுமைச்சக்திகள்” என்று ஏற்றுக்கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. அணுசக்தி உலைகளுக்கு முதலீடு ஒழுங்குசெய்யப்பட்டு, அவைகளின் எச்சத்தைப் பாதுகாப்பாகப் பேணும் மையம் இருக்கும் பட்சத்தில் அவைகளை 2045 வரை கட்டலாம். இயற்கை எரிவாயுச்சக்தியால் ஏற்படும் கரியமிலவாயு வெளியேற்றம் நிலக்கரியால் இயற்கைக்கு ஏற்படும் பாதகத்தைவிடக் குறைவாக இருப்பின் அதையும் ஐரோப்பிய ஒன்றியம் அனுமதிக்கும்.
அணுமின்சார உலைகளைத் தொடர்ந்தும் கட்ட அனுமதிப்பதை எதிர்க்கும் முக்கிய நாடு ஜேர்மனியாகும். தனது நாட்டின் எரிசக்திப் பாவிப்பை வேகமாக இயற்கை வளங்களுக்குப் பாதிப்பில்லாதவையாக மாற்றுவதில் பல வருடங்களாகவே ஈடுபட்டிருக்கும் ஜேர்மனி வெள்ளியன்று நாட்டின் மூன்று அணுமின்சார உலைகளை நிரந்தரமாக மூடியது. அவை ஜேர்மனியின் கடைசி 6 அணுமின்சார உலைகளில் மூன்றாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்