பனிச்சூறாவளிக்குள் மாட்டிக்கொண்டு உல்லாசப்பயணிகள் பலர் பாகிஸ்தானில் இறந்தனர்.
பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்திலிருக்கும் முர்ரி பனிக்கால உல்லாசத் தலமாகும். இது ராவல்பிண்டி நகரப் பிராந்தியத்தைச் சேர்ந்ததாகும். முர்ரி உல்லாசப்பயணத் தலத்துக்குப் போகும் வழியில் பலர் தங்கள் வாகனங்களுடன் பனிச்சூறாவளிக்குள் மாட்டிக்கொண்டனர்.
மிகப் பெரிய அளவில் பனிவீழ்ச்சி ஏற்பட்டதால் முர்ரியை நோக்கிக் கடந்த 10 – 15 வருடங்களில் இல்லாத அளவில் மக்கள் படையெடுத்தார்கள் என்கிறார் உள்ளூராட்சி அமைச்சர் ஷேய்க் ரஷீத் அஹ்மத். அவர்கள் சனிக்கிழமையன்று முர்ரியின் உச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது பனிச்சூறாவளி ஆரம்பித்தது. அளவுக்கதிகமான வாகனங்கள், போக்குவரத்துக்கு ஆபத்தான சூழல், வெப்பநிலை ஆகியவைகள் ஒன்றுசேர்ந்து வீதியை முடக்கின.
சுமார் 1,000 வாகனங்கள் போக்குவரத்தில் அசையாமல் மாட்டிக்கொண்டன. அதனுடன் உறையும் குளிரும் சேரவே 10 குழந்தைகள் உடபடச் சுமார் 23 பேர் தமது வாகனங்களுக்குள்ளேயே இறந்திருக்கிறார்கள் என்று பாகிஸ்தான் மீட்புப் படையினர் தெரிவிக்கின்றனர். அப்பிராந்தியம் “கடும் பாதிப்புக்குள்ளானதாக” அறிவிக்கப்பட்டிருப்பதுடன், போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருக்கிறது.
பக்கத்துப் பிராந்திய மீட்புப் படைகளுடன் சேர்ந்து பொலீசாரும், இராணுவத்தினரும் தொடர்ந்தும் அப்பகுதியில் மாட்டிக்கொண்ட சுற்றுலாப்பயணிகளை மீட்பதில் ஈடுபட்டிருக்கின்றனர். அதேசமயம் வழக்கத்துக்கு மாறான குளிர், பனி ஆகியவையால் அப்பகுதியில் வாழும் மக்களும் பெரும் பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள்.
நீர்க்குளாய்கள் உறைந்து, உடைந்திருப்பதாகவும், எரிவாயு கிடைக்காததால் உள்ளுரில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கும் மீட்புப் படையினர் உதவுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்