ஒரே வருடத்தில் கோப்பி விலை இரட்டிப்பாகக் காரணம் காலநிலைமாற்றத்தின் விளைவுகள்.
உலகின் மிகப் பெரிய கோப்பித் தயாரிப்பாளராக இருந்து வரும் நாடு பிரேசில் ஆகும். உலகுக்குத் தேவையான சுமார் 35 – 40 விகித கோப்பி அங்கிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கே கடந்த வருட ஆரம்பத்தில் கடும் வரட்சி ஏற்பட்டது. வருடத்தின் நடுப்பகுதியில் அந்த நாடு மிகவும் கடுமையான குளிரால் தாக்கப்பட்டது. 25 வருட காலத்தின் கடுமையான குளிர்காலமாக அது இருந்தது.
ஒரே வருடத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான காலநிலைகள் ஒன்றுசேர்ந்து நாட்டின் 15 விகிதமான கோப்பி அறுவடையை அழித்துவிட்டன.
கொலம்பியாவும் கோப்பித் தயாரிப்பில் பெருமளவில் ஈடுபடும் ஒரு நாடாகும். அங்கே கோப்பித் தோட்டங்கள் இருக்கும் பகுதிகளில் சமீப வருடங்களில் அளவுக்கதிகமான மழை பெய்து வருகிறது. அதுவும் கோப்பி விளைச்சலுக்குப் பாதிப்பானதே.
இரண்டு நாடுகளிலும் கடந்த வருடக் காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்குக் காரணமாக உலகளவிலான காலநிலை மாற்றத்தை நேரடியாகச் சுட்டிக் காட்டலாம் என்கிறார்கள் புவியியலாளர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்