சிரியாவின் போரில் மனிதகுலத்துக்கெதிரான குற்றஞ்செய்ததாக ஜேர்மனியில் ஒருவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
அன்வர் ரஸ்லான் என்று அழைக்கப்படும் சிரிய அரசுக்கு நெருங்கிய ஒருவர் உயர் பதவியிலிருந்துகொண்டு மனித குலத்துக்கெதிரான பல குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஜேர்மனியில் ஆயுள் காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார். சிரிய அரசின் சித்திரவதைக் குற்றங்களுக்கெதிராகச் சர்வதேச நீதிப்படி முதலாவதாக அந்த நபர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
சிரியாவின் அல் கத்திப் சிறைக்காவலின் அதிகாரியாக அன்வர் உயர் பதவியில் 2011 இல் இருந்ததாகச் சாட்சிகள் தெரிவிக்கின்றன. அச்சமயத்தில் பஷார் அல் – ஆசாத்துக்கு எதிராக நாடெங்கும் நடந்த எதிர்ப்பு ஊர்வலங்களில் பங்குபற்றியவர்களைக் கைது செய்து அச்சிறையில் வைத்திருந்தார்கள். 2012 வரை அல் கத்திப் சிறையில் சுமார் 4,000 பேர் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
சிறையிலிருந்தவர்களைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்துதல், பாலியல்வதை செய்தல், கொலைகள் செய்தல் போன்றவைகளில் அன்வர் திட்டமிட்டுச் செயற்பட்டதாகச் சாட்சிகள் பலர் தெரிவித்திருக்கின்றனர். ஆகக்குறைந்தது 58 கொலைகள் பற்றிய விபரங்கள் இவ்வழக்கில் பாவிக்கப்பட்டன.
2019 இல் அன்வர் ஜேர்மனிக்குள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரியபோது பொலீசாரால் கைதுசெய்யப்பட்டார். தமது உறவினர்களை அன்வரின் சித்திரவதைகள், கொலைகளுக்கு இழந்து ஜேர்மனியில் வாழும் சிரியர்கள் 80 பேர் வழக்கில் சாட்சிகளாகத் தோன்றினார்கள். இவ்வழக்கில் மனிதகுலத்துக்கெதிரான சர்வதேசச் சட்டங்களையே ஜேர்மனிய வழக்கறிஞர்கள் பாவித்துள்ளார்கள்.
சிரியாவைச் சேர்ந்த சுமார் 800,000 பேர் ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்