கிழக்கு ஐரோப்பாவில் முப்படைகளையும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரையும் இறக்க அமெரிக்கா தயாராகிறது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் குறிவைப்பால் ஏற்பட்டிருக்கும் அரசியல் முறுகல் நாளுக்கு நாள் பலமாகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கும் அமெரிக்கா நாட்டோ அமைப்பின் அங்கத்துவ நாடுகளைக் கிழக்கு ஐரோப்பாவில் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க இராணுவத்தினர் பல்லாயிரக்கணக்கில் அங்கத்துவ நாடுகளை நோக்கி அனுப்பப்படத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

“எங்களுடைய அங்கத்துவ நாடுகளின் எல்லைகளைப் பலப்படுத்த நாம் எங்களாலான சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்,” என்று நாட்டோ அமைப்பின் காரியதரிசி யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்கா மட்டுமன்றி நெதர்லாந்து, டென்மார்க், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளும் தமது போர்க்கப்பல்களையும், போர்விமானங்களையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், பால்டிக் நாடுகள், பல்கேரியா ஆகிய நாடுகளை நோக்கி நகர்த்தியிருக்கின்றன. ஜேர்மனியில் இருக்கும் அமெரிக்காவின் நாட்டோ படைகளும் கிழக்கு ஐரோப்பாவுக்கு அனுப்பப்படவிருக்கிறார்கள்.

 ருமேனியா வேண்டிக்கொள்ளும் பட்சத்தில் தமது இராணுவத்தைத் தாம் உதவுவதற்காக அனுப்பத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் குறிப்பிட்டிருக்கிறது.

ரஷ்யாவோ உக்ரேனுடைய எல்லையில் தனது இராணுவத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது. நட்பு நாடான பெலாருசும் இராணுவப் பயிற்சிகளில் ரஷ்யாவுடன் சேர்ந்து ஈடுபடுவதற்காக என்று கூறித் தனது இராணுவத்தினரை போலந்து, உக்ரேன் ஆகிய நாடுகளின் எல்லையை நோக்கி நகர்த்தியிருக்கிறது.

அத்துடன் அயர்லாந்தின் கடல் எல்லைக்கு வெளியே இராணுவப் பயிற்சிகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு ரஷ்யா அங்கே தனது கடற்படையை நகர்த்திருக்கிறது. நாட்டோ அங்கத்துவரல்லாத அயர்லாந்து தாம் ரஷ்யாவின் கடல்போர்ப் பயிற்சியைத் தடுக்க முடியாது என்று குறிப்பிடும் அதே சமயத்தில், ரஷ்யாவின் அந்த நடவடிக்கை தற்சமயம் எரிச்சலூட்டுவதாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்