கென்யாவில் காட்டு யானையொன்று இரட்டைக் குட்டிகளை ஈன்றது.
இரட்டைக் குட்டிகளை யானைகள் பிரசவிப்பது மிக மிக அரிதான சம்பவம். அப்படியானதொரு பிரசவம் கென்யாவின் வடக்கிலிருக்கும் தேசிய வனமான சம்புரு வனவிலங்குகள் பாதுகாப்பு பிராந்தியத்தில் நடைபெற்றது. அவை பிறந்திருப்பதை அங்கு வந்த சுற்றுலா வழிகாட்டிகள் தான் முதலில் கண்டார்கள்.
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் சிறீலங்காவின் பின்னவெல யானைச் சரணாலயத்தில் இரண்டு ஆண்குட்டிகளை யானை ஈன்றது. அங்கே இரட்டைக்குட்டிகள் யானையொன்றுக்குப் பிறந்தது 80 வருடங்களுக்கு முன்னராகும்.
ஆபிரிக்க யானைகளிடையே பிள்ளைகளை வளர்க்கும் காலம் மிக அதிகமானது. 22 மாத காலத்துக்குக் குட்டிகள் தாயுடனேயே திரிவது வழக்கம். இரட்டைக் குட்டிகள் நீண்ட காலம் உயர் தப்புவதும் அரிதானதே. 2006 இல் அதே காட்டுப்பகுதியில் பிறந்த இரட்டைக் குட்டிகள் சில நாட்களே உயிர்வாழ்ந்தன. தாய் யானையிடம் இரண்டு குட்டிகளுக்கும் தேவையான தாய்ப்பால் போதுமானதாக இருப்பதில்லை.
ஆபிரிக்க யானைகள் சமீப வருடங்களில் வேகமாக அழிந்துவரும் இனமாகும். கென்யாவில் முதல் முதலாக யானைகளைக் கடந்த வருடம் எண்ணியதில் 36,280 யானைகள் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. கென்யாவைப் பொறுத்தவரை யானைகளின் எண்ணிக்கை 2014 ம் ஆண்டிலிருந்து 12 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்