இஸ்தான்புல் நகரம் சரித்திரம் காணாத அளவு பனிமழையால் முடமாகிப் போனது.
துருக்கியின் மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல் திங்களன்று முதல் விழ ஆரம்பித்த பனிமழையால் தவித்துக்கொண்டிருக்கிறது. நகரின் முக்கிய வீதிகள், விமான நிலையம் உட்பட போக்குவரத்து எங்குமே இயங்காத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நகரின் ஆளுனர் நிலைமையை எதிர்கொள்ள இராணுவம், மீட்புப் படைகளையெல்லாம் உதவிக்கு அழைத்திருக்கிறார். பாடசாலைகள், கடைகள், அரசாங்க அலுவலகங்கள் சகலமும் மூடப்பட்டிருக்கின்றன. பொதுமக்களுக்கான போக்குவரத்தும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காலநிலையைக் கவனிக்க ஆரம்பித்த காலம் முதல் என்றுமே இத்தனை அதிகமான பனிமழையை இஸ்தான்புல் நகரம் கண்டதில்லை. பல மில்லியன் மக்கள் வாழும் நகரத்தின் வீதிகளின் பல பகுதிகளிலும் வாகனங்களுக்குள் பல்லாயிரக்கணக்கானோர் மாட்டுப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ மீட்புப்படைகள் களத்திலிறக்கப்பட்டிருக்கின்றன. நகரின் 71 பள்ளிவாசல்களையும் திறந்து தற்காலிகத் தங்குமிடமாகத் தேவைப்பட்டவர்களுக்கு உதவும்படி ஆளுனர் எக்ரிம் இமாமோகுளு உத்தரவிட்டிருக்கிறார்.
கடந்த வருடம் உலகில் மிக அதிகமானோர் பயணித்த இஸ்தான்புல் விமான நிலைய அதிகாரிகள் பனிமழை மோசமான அளவுக்குக்குப் போகும் என்று எதிர்பாராததால் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். விமானங்கள் பறக்கும் வழிகளெல்லாம் பனியால் நிறைந்துவிட விமான நிலையம் போக்குவரத்துக்கு முழுவதுமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விமான நிலையத்துக்குள் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மாட்டிக்கொண்டிருக்கிறர்கள். விமான நிலையக் கட்டடமொன்றின் கூரை பனியின் பாரம் தாங்காமல் உடைந்து விழுந்துவிட்டது.
செவ்வாயன்றுடன் நிலைமை சீராகப் போவதில்லை என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. காரணம் வரவிருக்கும் இரவு மேலும் அதிகமான அளவில் பனிமழை விழும் என்று வானிலை அறிக்கை குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்