கினியா, மாலியின் வரிசையில் புர்கினா பாசோவிலும் இராணுவம் ஆட்சியைக் கவிழ்த்தது.
மேற்கு ஆபிரிக்காவில் கடந்த ஒன்றரை வருடக் காலத்தில் மூன்றாவது நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்திருக்கிறது. சுமார் 21 மில்லியன் மக்களைக் கொண்ட புர்க்கினோ பாசோவில் இராணுவத்தின் ஒரு குழுவினர் திங்களன்று ஜனாதிபதியைக் கைது செய்ததாகவும், நாட்டின் அரசியல் சட்டம் மேற்கொண்டு செல்லுபடியாகாது என்றும் அறிவித்திருக்கிறார்கள். நாட்டின் முக்கிய அமைச்சுகளும், அரச ஊடகங்களையும் அவர்கள் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்.
ஆட்சியைக் கவிழ்த்த இராணுவக் குழுவினரை ஐ.நா- சபை கண்டித்திருக்கிறது. மேற்கு ஆபிரிக்க நாடுகளின் கூட்டுறவு அமைப்பும், ஆபிரிக்க நாடுகளின் ஒன்றியமும் ஆட்சிக்கவிழ்ப்பைக் கண்டித்திருக்கின்றன. நாட்டு மக்களிடையே இராணுவத்தினரின் நடவடிக்கைக்கு ஓரளவு ஆதரவு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புர்க்கினா பாசோவின் ஜனாதிபதி ரொக் காபொரே [Roch Kaboré] தனது இரண்டாவது தேர்தல் வெற்றியை 2020 இல் பெற்று ஆட்சியமைத்திருந்தார். மேற்கு ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் பரவலாக அதிகரித்திருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கொடூரமான நடவடிக்கைகளை காபொரேயின் ஆட்சியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்களுக்கு அவர் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன. தீவிரவாதிகளை அடக்கத் தமக்குத் தேவையான அதிகாரத்தையும், வசதிகளையும் கொடுக்காத ஜனாதிபதி மீது இராணுவத்தினரும் அதிருப்தி அடைந்திருந்ததால் சமீப மாதங்களில் ஆட்சிக்கவிழ்ப்பு பற்றிய வதந்திகள் பரவியிருந்தன.
பக்கத்து நாடுகளைப் போலவே புர்க்கினோ பாசோவிலும் அல் கைதா, காலிபாத் தீவிரவாதிகளுக்கு ஆதரவான ஆபிரிக்க இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களின் கை ஓங்கியிருக்கிறது. நாட்டின் பல பாகங்களிலும் அக்குழுக்கள் நடாத்திவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்களும், இராணுவத்தினரும் தமது உயிரை இழந்து வருகிறார்கள். லட்சக்கணக்கானோர் அகதிகளாகியிருக்கிறார்கள். தவிர நாட்டின் பொருளாதாரம் நலிந்துபோய் உலகின் ஏழை நாடுகளிலொன்றாக அந்த நாடு ஆகியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்