காலிபாத் தீவிரவாதிகள் நீண்ட காலத்தின் பின்னர் சிரியாவில் சிறையொன்றைத் தாக்கியிருக்கிறார்கள்.

ஐ.எஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமியக் காலிபாத் அமைக்க மிலேச்சத்தனமாகப் போரில் ஈடுபட்ட தீவிரவாதக் குழு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் தாம் கைப்பற்றி வைத்திருந்த பிராந்தியங்களை இழந்து பலவீனமடைந்தது. அவ்வியக்கத்தின் போராளிகள் பல்லாயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் சிரியாவின் வடகிழக்கில் குர்தீஷ் பிராந்தியத்தில் இருக்கும் சிறையொன்றை காலிபாத் தீவிரவாதிகள் தாக்கினார்கள். அவ்வியக்கத்தினரின் ஆயிரக்கணக்கான போராளிகளும், போரில் அவ்வியக்கத்தினரால் பாவிக்கப்பட்ட சுமார் 700 குழந்தைப் போராளிகளும் அச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். தமது போராளிகளை விடுதலை செய்வதற்காகவே ஐ.எஸ் இயக்கத்தினர் அந்தச் சிறையைத் தாக்கினார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. சிறைக்கு வெளியேயிருந்து ஆயுதத்தாக்குதல் நடந்த சமயத்தில் உள்ளேயிருந்த பிள்ளைகளைக் கேடயங்களாகப் பாவித்தும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் சிறைக்குள்ளிருந்த தீவிரவாதிகள் சிறைக்குள் தீவைத்திருக்கிறார்கள்.

இரண்டு நாட்களாக குர்தீஷ் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த போரில் 126 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் 84 பேர் ஐ.எஸ் இயக்கத்தினராகும். சிரியாவின் ஹசாக்கா நகரின் சிறையை உடைக்க நடந்த இந்தத் தாக்குதலே அந்த இயக்கம் வீழ்த்தப்பட்ட பின்னர் அவர்களால் நடாத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும். தொடர்ந்தும் சிறையின் பகுதியொன்றைத் தீவிரவாதிகளோ தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்